தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சொந்த நாடு பாலஸ்தீனர்களின் உரிமை: சிங்கப்பூர் மீண்டும் வலியுறுத்து

2 mins read
f61f06da-fc9f-4ce7-999b-21cc00db675b
காஸாவின் ஜபாலியா நகரில் வீடுகளை இழந்த சிறுவர்கள் அழிந்துபோன கட்டடங்களைப் பார்க்கின்றனர். - படம்: ஏஎஃப்பி

பாலஸ்தீனர்களுக்கு சொந்த நாடு பெறும் உரிமை உள்ளதாக சிங்கப்பூர் தனது நீண்டநாள் கொள்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7ஆம் தேதி) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பாலஸ்தீனர்கள் தங்களுக்கு என சொந்த நாடு ஒன்றைப் பெறும் உரிமை உள்ளதாக கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்ததை சுட்டியது.

மத்திய கிழக்கில் நீண்டநாட்களாக தொடரும் போருக்கு ஒட்டுமொத்தமான, நியாயமான, நிலைத்திருக்க கூடியதாக ஒரு தீர்வு ஏற்பட வேண்டும். அதற்கு பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகள் உருவாவதுதான் ஒரே தீர்வு என்று அறிக்கை விளக்கியது. அந்த இரு நாட்டு தீர்வுதான் ஐநா பாதுகாப்பு மன்ற தீர்மானங்களை ஒட்டியிருக்கும் என்றும் அறிக்கை கூறியது.

“பாலஸ்தீன அமைப்பின் நிர்வாக, மறுசீரமைப்புத் திறனை மேம்படுத்த சிங்கப்பூர் தனது தொழில்நுட்ப உதவித் திட்டத்தின்கீழ் அந்த அமைப்புடன் அணுக்கமாக செயல்படும்,” என்று அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களை மற்ற நாடுகளில் மறுகுடியமர்த்தி, அந்தப் பகுதியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து அதை பிரான்சில் உள்ள ரிவியேரா போன்ற கடற்கரை சொகுசுத் தளமாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

திரு டிரம்பின் இந்தக் கூற்று உலகத் தலைவர்களிடம் இருந்து கண்டனக் குரல்களை வரவழைத்தது.

இது குறித்துப் பேசிய ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், இனப் பேரழிவைத் தவிர்க்குமாறும் பிரச்சினைத் தீர்ப்பதாக எண்ணி நிலைமையை மேலும் மோசமாக்க வேண்டும் என்று அதிபர் டிரம்பை கேட்டுக்கொண்டார்.

“இரு நாட்டு கொள்கையை நாம் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்,” என்று அவர் அறிவுரை வழங்கினார்.

குறிப்புச் சொற்கள்