பாண்டுங்: இந்தோனீசியாவின் பாண்டுங் நகரில் சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் சுற்றுப்பயணி ஒருவரை மானபங்கப்படுத்தியதாக நம்பப்படும் இளையர்கள் மூவரை இந்தோனீசியக் காவல்துறை கைது செய்துள்ளது.
அச்சம்பவம் பாண்டுங்கில் உள்ள பிராகா ஸ்திரீட்டில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தேதி நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது.
கைதான சந்தேக நபர்களில் இருவர் சட்டபூர்வமான குறைந்தபட்ச வயதுக்குக்கீழ் உள்ளவர்கள். அவர்கள் இருவரும் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று ஜகார்த்தா குளோப் ஊடகம் தெரிவித்தது. கைதான மூவரும் பதின்ம வயதினர்.
சந்தேக நபர்களில் ஒருவர் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தகாத சைகைகளைக் காண்பித்ததாகவும் தவறான முறையில் அவரைத் தொட்டதாகவும் ஒப்புக்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இதர இருவரும் மானபங்கச் செயலில் ஈடுபட்டதை மறுக்கின்றனர்.
காற்பந்தாட்டத்தைக் காணச் சென்றுகொண்டிருந்தபோது அவர்கள் அப்பெண்ணைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அவ்வேளையில் அப்பெண், தம் கணவருடன் உல்லாசமாகக் காணொளி ஒன்றைப் பதிவுசெய்துகொண்டிருந்தார் என்று மதர்ஷிப் போன்ற ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
நடந்த அனைத்தும் காணொளியில் பதிவானது. நான்கு நாள்களில் அக்காணொளி 786,000க்கும் அதிக முறை காணப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பெண்ணுடன் தாங்கள் தொடர்பில் இருப்பதாக பாண்டுங் காவல்துறைத் தலைவர் புடி சட்ரோனோ சனிக்கிழமையன்று (ஜனவரி 4) கூறினார்.