ஜோகூர் பாரு உணவுக் கடைமீது மோதிய சிங்கப்பூர்க் கார்

ஜோகூர் பாரு உணவுக் கடைமீது மோதிய சிங்கப்பூர்க் கார்

படம்: ஜோகூர் ரோடா/ ஃபேஸ்புக்

28 Sep 2026 - 9:49 pm

1 mins read

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாருவில் உள்ள தாமான் செந்தோசா என்ற பகுதியில் உள்ள கஞ்சி விற்கும் கடை ஒன்றின்மீது சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட கார் மோதும் காணொளி இணையத்தில் பரவிவருகிறது.

இம்மாதம் 27ஆம் தேதி அதிகாலை நேரத்தில் நேர்ந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதை மலேசியக் காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

திங்கட்கிழமை (செப்டம்பர் 28) பின்னிரவு 2.27 மணியளவில் தொழில்நுட்பராக வேலை செய்யும் 41 வயது உள்ளூர் ஆடவரிடமிருந்து புகார் வந்ததாக ஜோகூர் பாருவின் தென் வட்டார காவல்துறை தலைவர் அஸ்ருல் ஹி‌‌‌ஷாம் முகமது ‌‌ஷஃபேய் தெரிவித்தார்.

கடையில் கஞ்சி சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது வெளிநாட்டினர் என்று நம்பப்படும் சந்தேக நபர் ஒருவர் காரிலிருந்து இறங்கி இரும்புக் குழாயைச் சுழற்றியதாகக் கூறினார்.

பொதுமக்கள் சம்பவ இடத்தில் கூடியதை அடுத்து மதுபோதையில் இருந்ததாக நம்பப்படும் ஆடவர், மீண்டும் காருக்குள் ஏறினார்.

அதையடுத்து கடையில் இருந்த மேசை நாற்காலிகளை நோக்கி காரை ஓட்டிய ஆடவர், பின் அங்கிருந்து தப்பி ஓடியதாகக் கூறப்பட்டது.

சந்தேக நபரைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து அறிந்தவர்கள் ஜோகூர் பாரு தென் வட்டாரக் காவல்துறை தலைமையகத்தை 07-2182323 என்ற அவசர எண்ணில் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்
கார்மோதல்ஜோகூர் பாருஉணவுக் கடை