ஈப்போ விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய சிங்கப்பூரர்

ஈப்போ விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய சிங்கப்பூரர்

படம்: த ஸ்டார் / ஏஷியா நெட்வொர்க்

10 Nov 2026 - 4:34 pm

2 mins read

ஈப்போ: மலேசியக் காவல்துறையினர், மலேசிய ரிங்கிட் 1.5 மில்லியன் (S$473,000) மதிப்புள்ள போதைப்பொருளை 29 வயது சிங்கப்பூரரிடமிருந்து ஈப்போ விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) கைப்பற்றியதாகத் தெரிவித்துள்ளனர்.

அம்மாநிலத்தின் சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தில் அன்றைய தினம் காலை 6.20 மணிக்கு துணைக் காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அந்த ஆடவர் கொண்டுவந்திருந்த பயணப் பெட்டியில் கஞ்சா போதைப்பொருளின் மலர்மொட்டுகள் அடங்கிய பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன் விவரங்களை பேராக் மாநிலக் காவல்துறைத் தலைவர் முகம்மது அல்வி சைனல் அபிடின் விளக்கினார்.

அந்த ஆடவர் வைத்திருந்த பயணப் பெட்டியில் 19.04 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருள் 36 பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

அந்தப் போதைப்பொருளை அவர் சிங்கப்பூர் வழியாக லண்டனுக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது என்று திரு முகம்மது அல்வி தெரிவித்தார்.

இணையத்தில் சிறந்த ஊதியத்துடன் நல்ல வேலை வாய்ப்பு உள்ளதாகக் கிடைத்த தகவலின்படி, ஆடவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் காவல்துறைத் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய கடத்தல் செயல்பாடுகளில் அதிக கூட்டமில்லாத விமான நிலையங்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாகவும் அவர் கருத்துரைத்தார்.

மலேசியாவுக்கு நவம்பர் 7 வந்துசேர்ந்த ஆடவர் சிலாங்கூரின் கஜாங்கில் தங்கி, போதைப்பொருளை எடுத்துக்கொண்டு, ஈப்போ வந்துள்ளார்.

ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின்கீழ் (1952) விசாரணைக்காக ஏழு நாள்கள் ஆடவர் தடுத்துவைக்கப்படுவார். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை, பிரம்படி அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்