தாய்லாந்து விபத்தில் சிங்கப்பூரர் உயிரிழப்பு

1 mins read
78d831a3-2256-4e39-af40-40533cbb9a05
சாலையில் வழுக்கிச் சென்ற மோட்டார்சைக்கிள் எதிர்த்திசையில் வந்த சரக்குந்துமீது மோதியது. - காணொளிப்படம்: ஃபேஸ்புக்/யிங் கரீம்

பேங்காக்: தாய்லாந்து நெடுஞ்சாலை ஒன்றில் வியாழக்கிழமை (ஏப்ரல் 17) நேர்ந்த விபத்தில் 26 வயதான சிங்கப்பூர் ஆடவர் உயிரிழந்தார்.

அவர் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் எதிரில் வந்த சரக்குந்துமீது மோதியதாகத் தாய்லாந்துச் சாலைப் பாதுகாப்புக் குழு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

விபத்து நேர்ந்தபோது மழை பெய்ததாகவும் அது குறிப்பிட்டது.

ஏப்ரல் 11 முதல் 17 வரை, சொங்க்ரான் எனப்படும் தாய்லாந்துப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில், அங்குச் சாலை விபத்துகளைத் தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அதுபற்றி, தாய்லாந்தின் தெற்கு மாநிலமான யாலாவின் துணை ஆளுநர் அம்னத் சுவாதோங்கிடம் தாய்லாந்துச் சாலைப் பாதுகாப்புக் குழு விளக்கமளித்தது.

அப்போது, இந்த ஏழு நாள் காலகட்டத்தில் 21 விபத்துகள் நேர்ந்ததாகவும் அவற்றில் 23 பேர் காயமுற்றதாகவும் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரர் உயிரிழந்த விபத்து குறித்த காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

சாலையில் வழுக்கிச் சென்ற அவரது மோட்டார்சைக்கிள் எதிரில் வந்த சரக்குந்துடன் மோதுவதை அது காட்டுகிறது.

குறிப்புச் சொற்கள்