மலேசியாவில் மானிய விலை பெட்ரோலை நிரப்பிய சிங்கப்பூரருக்கு $6,300 அபராதம்

மலேசியாவில் மானிய விலை பெட்ரோலை நிரப்பிய சிங்கப்பூரருக்கு $6,300 அபராதம்

2 mins read
4f717a68-c044-44e3-98fc-67d6a38ba638
வெளிநாட்டில் பதிவுசெய்யப்படும் வாகனங்களை ஓட்டுவோர் மலேசியாவில் மானிய விலையில் ரோன்95 பெட்ரோலை வாங்குவது, ஏப்ரல் முதல் தேதியிலிருந்து சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட காரில் மானிய விலை ‘ரோன்95’ பெட்ரோலைச் சட்டவிரோதமாய் நிரப்பியதற்காக, சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவருக்கு மலேசியாவில் 20,000 ரிங்கிட் ($6,300) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

ஜோகூர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (ஜூலை 2) அவருக்கு 20,000 ரிங்கிட் அபராதம் அல்லது அதைக் கட்டத் தவறினால் மூன்று மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மலேசியாவின் ‘நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’, ‘ஆஸ்ட்ரோ ஆடியோ’ ஊடகங்கள் அந்தத் தகவலை வெளியிட்டன.

50 வயதுகளில் இருக்கும் அவர் அபராதத் தொகையை அன்றே செலுத்தினார்.

மலேசியாவின் உள்நாட்டு வர்த்தக, வாழ்க்கைச் செலவின அமைச்சு அதிகாரிகள் ஏப்ரல் 9ஆம் தேதி நடத்திய சோதனையின்போது அவர் பிடிபட்டார்.

1961ஆம் ஆண்டின் விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் அவர் குற்றம் புரிந்தது விசாரணையில் தெரியவந்தது. அந்தச் சட்டத்தின்படி, வெளிநாட்டுப் பதிவு எண் கொண்ட வாகனத்தைப் பயன்படுத்தி மானிய விலையிலான எரிபொருளை வாங்குவது குற்றம்.

கட்டுப்படுத்தப்பட்ட பொருள்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதில் அமைச்சு தொடர்ந்து உறுதியுடன் செயல்படுவதை இந்த வழக்கு நிரூபித்துள்ளது என்று ஜோகூர் கேபிடிஎன் அமைப்பின் இயக்குநர் லிலிஸ் சாஸ்லிண்டா பொர்னோமோ கூறினார்.

நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலும் நாட்டின் விநியோக நிலைத்தன்மையைப் பேணும் விதத்திலும் அமைச்சின் நடவடிக்கை அமைந்துள்ளதாகக் கூறப்பட்டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

வெளிநாட்டில் பதிவுசெய்யப்படும் வாகனங்களை ஓட்டுவோர் மலேசியாவில் மானிய விலையில் ரோன்95 வகை பெட்ரோலை வாங்குவது, இவ்வாண்டு ஏப்ரல் முதல்தேதியிலிருந்து சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வாகனங்களுக்கு ரோன்95 பெட்ரோலை விற்கும் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மீதும் அந்த வாகனங்களின் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க இந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது. இதற்கு முன்பு, எரிபொருள் நிலைய உரிமையாளர்கள்மீது மட்டுமே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபெட்ரோல்விலைநிதியுதவிசலுகை