பட்டாயா: தாய்லாந்தின் கடலோர நகரமான பட்டாயாவில் ஆளில்லா வானூர்தியைப் பறக்கவிட்டதற்காக சிங்கப்பூரைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பட்டாயாவின் சிறப்பு விவகாரங்கள் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் 44 வயது கோவை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) கைது செய்தனர்.
தாய்லாந்து நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 12.20 மணி அளவில் பட்டாயாவில் பொழுதுபோக்குக்குப் பெயர் போன வாக்கிங் ஸ்திரீட்டில், கோ அனுமதியின்றி ஆளில்லா வானூர்தியைப் பறக்கவிட்டதாகக் கூறப்படுகிறது.
தாய்லாந்து - கம்போடியா எல்லைப் பகுதியில் பதற்றநிலை நிலவுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக ஆளில்லா வானூர்தியைப் பறக்கவிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தடையை ஜூலை மாதம் 30ஆம் தேதியன்று தாய்லாந்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நாடு தழுவிய நிலையில் நடைமுறைப்படுத்தியது.
புகைப்படம் பிடிப்பதில் தமக்கு ஆர்வம் அதிகம் என்றும் வாக்கிங் ஸ்திரீட்டின் இரவு நேரக் காட்சியை வானிலிருந்து படமெடுக்கவே ஆளில்லா வானூர்தியைப் பறக்கவிட்டதாகவும் விசாரணையின்போது பட்டாயா நகரக் காவல்துறை அதிகாரிகளிடம் கோ தெரிவித்தார்.
ஆளில்லா வானூர்தியைப் பறக்கவிடத் தேவையான உரிமம் கோவிடம் இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
ஆளில்லா வானூர்தியுடன் அதை இயக்க கோ பயன்படுத்திய சாதனம், மின்கலன்கள் முதலியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கோவுக்கு 40,000 பாட் (S$1,600) அபராதமும் ஓராண்டுச் சிறையும் விதிக்கப்படலாம்.

