ஜோகூர் பாரு: சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் நடந்து இரண்டு மாதங்களாகியுள்ள நிலையில் ஜோகூரில் உள்ள டுரியான் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
சிங்கப்பூரர்கள் ஜோகூர் பாலத்தைக் கடந்து டுரியானை ருசித்து, ரசித்து வருகின்றனர்.
“சிங்கப்பூரர்கள் ஒவ்வோர் ஆண்டும் டுரியான் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வது வழக்கம். ஆனால், இவ்வாண்டு சிங்கப்பூர் பொதுத் தேர்தலுக்குப் பிறகு அத்தகைய பயணம் 30 விழுக்காடு அதிகரித்துள்ளது,” என்று ஜோகூர் பயண வழிகாட்டிகள் சங்கத்தின் தலைவர் ஜிம்மி லியோங் தெரிவித்தார்.
தேர்தலுக்குப் பிந்திய போக்கு ஜோகூரின் வருமானத்தை கூட்டியிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேர்தலில் ஆதரவளித்த தங்களுடைய சமூகத்திற்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கும்விதமாக அவர்களை டுரியான் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பிரபலமான வழியாக இருக்கிறது என்று திரு லியோங் கூறினார்.
“ஒவ்வொரு குழுவிலும் எட்டு முதல் 10 பேருந்துகள் இடம்பெற்று இருக்கும்,” என்றார் அவர்.
உதாரணமாக, ஜாலான் காயு நாடாளுமன்ற உறுப்பினரான இங் சீ மெங், அண்மையில் ஜோகூருக்கு ‘முசாங் கிங்’ சுற்றுலா செல்லும் ஓர் அறிவிப்பை ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார்.
ஒரு நாள் சுற்றுலாப் பயணத்திற்கான கட்டணம் 110 வெள்ளி. அதில் போக்குவரத்து, முசாங் கிங் டுரியான் மதிய விருந்து, எட்டு வகையான இரவு உணவு போன்றவை உள்ளடங்கியிருந்தன.