அணுசக்தித் திறனை வலுவாக மேம்படுத்திக்கொள்ளும் இலக்குடன், அனைத்துலக அணுசக்தி முகவையுடன் (ஐஏஇஏ) ஐந்தாண்டு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சிங்கப்பூர் கையெழுத்திட்டுள்ளது.
நாட்டில் முன்னுரிமை அளிக்கப்படும் பகுதிகளைக் கண்டறிந்து, தேசிய மேம்பாட்டு திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அணுசக்தியின் பயன்பாட்டைப் பரிமாற்றம் செய்வதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேற்கொள்ள அமைப்புக்கும் சிங்கப்பூருக்கும் இந்த ஒப்பந்தம் வழிகாட்டியாக அமையும்.
ஐஏஇஏ அமைப்புடன் 2026ஆம் ஆண்டு முதல் 2031ஆம் ஆண்டுவரை கையெழுத்தான ஒப்பந்தம் குறித்து தேசிய சுற்றுப்புற வாரியம் (என்இஏ) வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) விவரங்களை வெளியிட்டது.
சிங்கப்பூர் 1967இல் முகவையுடன் உறுப்பினராக இணைந்தது முதல் தொடர்ந்துவரும் பல ஆண்டு கால தொழில்நுட்ப ஒத்துழைப்பின் அடுத்த கட்டமாக இந்த நான்காவது 'நாட்டுத் திட்டக் கட்டமைப்பு' (Country Programme Framework) அமைந்துள்ளதாகத் தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது
அடுத்த பல ஆண்டுகளுக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை ஒப்பந்தம் வரையறுக்கும்.
உலக அணுசக்தி பாதுகாப்பை கண்காணிக்கும் ஐஏஇஏ அமைப்புடன் ஒருங்கிணைந்து தேசிய சுற்றுப்புற வாரியம் திட்டத்தை மேம்படுத்தியது. அரசாங்க அமைப்புகள், துறைகள் போன்ற பலவற்றுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
ஆறு முக்கிய பகுதிகளுக்கு முன்னுரிமை
முன்னுரிமை அளிக்கப்படும் ஆறு முக்கிய பகுதிகள் திட்டத்தில் அடையாளம் காணப்பட்டன.
அணுசக்தி, கதிர்வீச்சு ஆகியவற்றின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், உணவுப் பாதுகாப்பு, மனித ஆரோக்கியம், எரிபொருள் ஆற்றல், தொழில்துறை பயன்பாடுகள் என அந்த ஆறு முன்னுரிமைகள் வகைப்படுத்தப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிதல், சுற்றுப்புற கதிர்வீச்சு அளவை கண்காணித்தல், உணவுப் பொருள்களில் கதிரியக்க வேதியியலுடன் பாதுகாப்பு சோதனையை மேற்கொள்ளுதல், அணுசக்தியைக் கொண்டு புற்றுநோய் மருத்துவத்தை மேம்படுத்துதல் போன்ற பல நடவடிக்கைகளுக்கு திட்ட வரையறை வழிகாட்டும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் விளக்கமளித்தது.
இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்துடன் (NRC) இணைந்து புதிய பயிற்சித் திட்டம் ஒன்றை வாரியம் உருவாக்கவுள்ளது.
சிங்கப்பூரின் தேசிய கதிரியக்க வேதியியல் ஆய்வகம் 2026 முதல் 2030 வரை ஐஏஇஏ-வின் அதிகாரபூர்வ ஒத்துழைப்பு மையமாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2025ல் பிரதமர் வரவுசெலவுத் திட்ட உரை
பிரதமர் லாரன்ஸ் வோங் 2025 ஆண்டின் வரவுசெலவுத்திட்ட உரையில் குறிப்பிட்டது போல, சிங்கப்பூரில் அணுசக்தியைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அரசு முறையாக ஆய்வு செய்து வருவதன் முன்னெடுப்பு இதுவாகும்.

