ஆசியானை உலகளாவிய சுற்றுப்பயணத்துறை நடுவமாக உருவாக்கத் தாய்லாந்துப் பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத் இலக்கு கொண்டுள்ளார்.
இதன் தொடர்பான திட்டத்தை அவர் பரிந்துரை செய்துள்ளார்.
இத்திட்டத்துக்கு ‘ஆறு நாடுகள், ஒரே பயண இலக்கு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது நடைமுறைப்படுத்தப்பட்டால் உலகளாவிய சுற்றுப்பயணத்துறை நடுவமாக ஆசியானின் நிலை உயரும் என்று 38 வயது திருவாட்டி பெடோங்டார்ன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆசியான் நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்குத் தேவையான ஏற்பாடுகள் இத்திட்டம் மூலம் சீர்ப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
இதன் விளைவாக ஆசியான் நாடுகளின் சுற்றுப்பயணத்துறை உயிரூட்டப்பட்டு செழிப்படையும் என்றார் அவர்.
இத்திட்டம் மூலம் ஓர் ஆசியான் நாட்டிலிருந்து இன்னோர் ஆசியான் நாட்டுக்கு வெளிநாட்டுப் பயணிகள் எளிதில் செல்லலாம்.
மேலும் சந்தைப்படுத்தும் முயற்சிகள் ஒருங்கிணைக்கப்படும் என்று திருவாட்டி பெடோங்டார்ன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் திட்டத்தில் புருணை, கம்போடியா, லாவோஸ், மலேசியா, வியட்னாம், தாய்லாந்து ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.
இதில் சேர சிங்கப்பூருக்கும் அழைப்பு விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணத்துறையில் ஆசியான் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த இத்திட்டம் முக்கிய வாய்ப்புகளை வழங்கும் எனத் தாம் நம்புவதாகப் பிரதமர் பெடோங்டார்ன் குறிப்பிட்டார்.
இதன் மூலம் ஆசியான் நாடுகளின் பொருளியல், கலாசார இணைப்பு வலுவடையும் என்றார் அவர்.
‘ஆறு நாடுகள், ஒரே பயண இலக்கு’ திட்டம் ஆசியான் நாடுகளுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று திருவாட்டி பெடோங்டார்ன் தெரிவித்தார்.
வெளிநாட்டுப் பயணிகள் மட்டுமின்றி ஆசியான் நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் பயனடைவர் என்றார் அவர்.
ஆசியான் நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்பவர்களில் பலர் தாய்லாந்து அல்லது மலேசியா மூலம் தங்கள் பயணத்தைத் தொடங்குவதால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தனித்துவ ஆற்றல் அவ்விரு நாடுகளுக்கும் உள்ளது என்று அவர் கூறினார்.
ஓர் ஆசியான் நாட்டிலிருந்து இன்னோர் ஆசியான் நாட்டுக்குச் செல்வதை எளிமையாக்குவது, பயண விளம்பரங்கள், தொகுப்புத் திட்டங்கள் ஆகியவற்றைச் சந்தைப்படுத்தும் முயற்சிகளை ஒருங்கிணைப்பது, பயண இணைப்புகளை மேம்படுத்துவது ஆகியவை தொடர்பாக மலேசியா, கம்போடியா, வியட்னாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் தாய்லாந்து அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாகத் திருவாட்டி பெடோங்டார்ன் தெரிவித்தார்.

