உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் சட்டவிரோதமாக எல்லை தாண்டிய வாகனச் சேவை வழங்கிய ஆறு ஓட்டுநர்கள் இரு வார நடவடிக்கையின்போது அதிகாரிகளிடம் பிடிபட்டனர்.
தேசிய தனியார் வாடகை வாகனச் சங்கமும் தேசிய டாக்சி சங்கமும் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை (அக்டோபர் 22) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி இதுவரை மொத்தம் 260 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சுன் ஷுவெலிங் தெரிவித்தார்.
எல்லை தாண்டிய பயணங்களின்போது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சிங்கப்பூர் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
இத்தகைய சட்டவிரோதச் சேவைகளை வழங்குபவர்களுக்கு $3,000 வரை அபராதம், ஆறு மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என ஆணையம் நினைவூட்டியுள்ளது.
மேலும், குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்படக்கூடும் என்றும் அது எச்சரித்துள்ளது.
ஜோகூர் பாரு, இஸ்கந்தர் புத்திரி, ஃபாரஸ்ட் சிட்டி, குலாய், செனாய் ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்ய சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட எல்லை தாண்டிய டாக்சி அல்லது கிராப் செயலி வழி உரிமம் பெற்ற சேவைகளை மட்டுமே மக்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
