ஆடிஸ் ஆபபா (எத்தியோப்பியா): சீனச் சத்துமருந்துக்காக ஆண்டுதோறும் ஆறு மில்லியன் கழுதைகள் கொல்லப்படுவதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட ஓர் அறநிறுவனம் தெரிவித்துள்ளது.
இது, வாழ்விற்காக விலங்குகளைப் பெரிதும் சார்ந்துள்ள ஆப்பிரிக்கச் சிற்றூர்வாசிகளைப் பெரிதும் பாதித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
‘எஜியாவ்’ (ejiao) என அழைக்கப்படும் சத்துமருந்தைத் தயாரிக்க கழுதையின் தோல்களிலிருந்து எடுக்கப்படும் வன்புரதம் (collagen) பயன்படுத்தப்படுகிறது. அந்த மருந்துப்பொருள் தொழில்துறையின் மதிப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டாலர் (S$8.6 பில்லியன்) என்று சீனாவைச் சேர்ந்த சியன்ஸான் எனும் ஆய்வு நிறுவனம் கூறுகிறது.
சீனாவில் 1992ஆம் ஆண்டில் 11 மில்லியனாக இருந்த கழுதைகளின் எண்ணிக்கை, 2023ஆம் ஆண்டில் 1.5 மில்லியனாகக் குறைந்துவிட்டது. இதனையடுத்து, அந்நாடு கழுதைகளுக்காக ஆப்பிரிக்காவை நாடத் தொடங்கியது.
கழுதைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதை அடுத்து, அவ்விலங்கைக் கொல்வதற்கு 2024ஆம் ஆண்டு ஆப்பிரிக்க ஒன்றியம் 15 ஆண்டுகளுக்குத் தடைவிதித்தது.
சென்ற ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 5.9 மில்லியன் கழுதைகள் கொல்லப்பட்டதாக பிரிட்டனைச் சேர்ந்த ‘கழுதைக் காப்பகம்’ எனும் அறநிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த 2027ஆம் ஆண்டிற்குள் எஜியாவ் சத்துமருந்துத் துறைக்குக் குறைந்தது 6.8 மில்லியன் கழுதைகளின் தோல்கள் தேவைப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கழுதைகளுக்கான தேவை அதிகரித்துவருவதால் அவை சட்டவிரோதக் கும்பல்களின் இலக்காக மாறிவருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
“கழுதைகளை விற்கும்படி அவற்றின் உரிமையாளர்களுக்கு முகவர்கள் மூலமாக வணிகர்கள் நெருக்குதல் அளிக்கின்றனர்,” என்று கழுதைக் காப்பகம் அறநிறுவனம் தெரிவித்தது.
குறிப்பாக, இரவு நேரங்களில் கழுதைகள் திருடப்பட்டு, கொல்களத்திற்குக் (slaughterhouse) கொண்டுசெல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.
கழுதைகளின் இழப்பை மனிதர்கள், குறிப்பாக ஆப்பிரிக்கப் பெண்களும் குழந்தைகளும் அதிகம் உணர்கின்றனர். நிலத்தை உழவும் சந்தைக்குப் பொருள்களைக் கொண்டுசெல்லவும் அவர்கள் கழுதைகளையே சார்ந்திருக்கின்றனர்.
சட்டவிரோதமாகக் கழுதைகள் கொல்லப்படுவது சுகாதாரப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.
பதனிடப்படாமல் தோல்களை எடுத்துச்செல்வதும் அவற்றின் உடல்களை முறையாக அப்புறப்படுத்தாததும் தொற்றுநோய்கள் பரவும், உள்ளூர்ச் சூழலியல் பாதிக்கப்படும் அபாயத்தை ஏற்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது.

