பாரிஸ்: புவி வெப்பமயமாதலைத் தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கத் தவறியதாக 32 ஐரோப்பிய நாடுகள்மீது மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் போர்ச்சுகலைச் சேர்ந்த ஆறு இளையர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை அவசர வழக்காக இம்மாதம் 27ஆம் தேதி விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களால் மக்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். அதிலிருந்து அவர்களைப் பாதுகாக்க ஐரோப்பிய நாடுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக அந்த இளையர்கள் தெரிவித்தனர்.
2017ஆம் ஆண்டு, போர்ச்சுகலில் ஏற்பட்ட மோசமான காட்டுத்தீயில் சிக்கி 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்நாட்டின் பல பகுதிகள் தீக்கிரையாயின.
இளையர்கள் இத்தகைய வழக்கைப் பதிவு செய்ய அந்தக் காட்டுத்தீச் சம்பவம் தூண்டுதலாக அமைந்தது எனக் கூறப்பட்டது.