ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் (எஸ்எஸ்ஜி) அமைப்பின்கீழ் பயிற்சிகளை வழங்குவோர் மூன்றாம் தரப்பு விளம்பரதாரர்களைப் பயன்படுத்துவதற்கு டிசம்பர் முதல் தேதியிலிருந்து தடை விதிக்கப்படும்.
அதன்படி வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற தகவல் தளங்கள், சமூக ஊடகங்கள் நேரடிச் சந்திப்பு, தொலைபேசி அழைப்பு முதலியவற்றின் மூலம் பயிற்சி வகுப்புகளை விளம்பரப்படுத்த முடியாது. தனிமனிதர்களையும் நிறுவனங்களையும் பயிற்சிகளில் சேருமாறு கூறுவதற்காக அணுகவும் முடியாது.
கடந்த ஆண்டில் அத்தகைய விளம்பர நடவடிக்கைகள் அதிகம் இருந்ததாகப் பொதுமக்கள் கூறியதைத் தொடர்ந்து தடை பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்எஸ்ஜி புதன்கிழமை (அக்டோபர் 8) வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
பயிற்சி வகுப்புகளில் சேருவோருக்கு வெகுமதி அளிக்க மூன்றாம் தரப்பு முகவர்கள் முன்வந்த சம்பவங்களும் உண்டு. முகவர்கள் குறைந்தபட்சத் தகுதி இல்லாதவர்களையும் பயிற்சி வகுப்புகளுக்காகக் கையெழுத்திடச் செய்ததும் தெரியவந்தது.
ஆங்கில மொழியை அவ்வளவாகப் புரிந்துகொள்ள இயலாத முதியோரை ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கப்படும் வகுப்புகளில் சேருவதற்கு இணங்கச் செய்வது, அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
அத்தகைய சம்பவங்கள் பரவலாக இல்லை. ஆயினும் மூன்றாம் தரப்பு சம்பந்தப்படும்போது தவறான தகவல்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளதை அறிந்திருப்பதாக எஸ்எஸ்ஜி கூறியது.
“அத்தகைய தவறான நடைமுறைகளைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், அவை பரவக்கூடும். பயிற்றுவிப்புத் துறைக்கு அவப்பெயரைப் பெற்றுத்தரக்கூடும். கற்றுக்கொள்வோரின் ஆர்வத்தையும் பாதிக்கக்கூடும். பயிற்சி வகுப்புகளில் சேருவதற்காகத் தனிப்பட்ட விவரங்களை மூன்றாம் தரப்பு முகவர்கள் கேட்கும்போது அவை கசிவதற்கும் சாத்தியம் உண்டு,” என்று அது சொன்னது.
மூன்றாம் தரப்புகள் வரும் டிசம்பர் முதல் தேதியிலிருந்து கற்போரை நேரடியாகத் தொடர்புகொள்ள அனுமதிக்கப்படமாட்டா. விளம்பரத்திற்காகப் புதிய வகுப்புகளில் சேர விரும்புவோரைப் பற்றிய தகவல்களையும் அவர்கள் அணுகமுடியாது. பயிற்சி வழங்குவோரின் சார்பாக வேறு எதனையும் அவர்கள் கோரமுடியாது என்றும் எஸ்எஸ்ஜி தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
பதிவுசெய்துகொண்டுள்ள பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் புதிய நடைமுறைகளை டிசம்பர் முதல் தேதியிலிருந்து பின்பற்ற வேண்டும் என்றும் அது கூறியது.
முறையற்ற விளம்பர நடைமுறைகளைக் கண்டால் பொதுமக்கள் எஸ்எஸ்ஜியிடம் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
இணைய முகவரி: https://service-portal.skillsfuture.gov.sg/s/feedback