பிராட்டஸ்லாவா: காட்டுப்பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த ஆடவர் ஒருவரைத் தாக்கிக் கொன்றதையடுத்து, தன் நாட்டிலுள்ள நான்கில் ஒரு பங்குக் கரடிகளைச் சுட்டுக்கொல்லும் திட்டத்திற்கு ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியா ஒப்புதல் அளித்துள்ளது.
ஸ்லோவாக்கியாவில் ஏறக்குறைய 1,300 பழுப்புக் கரடிகள் உள்ள நிலையில், அவற்றில் 300 கரடிகளைக் கொல்ல அரசு முடிவுசெய்துள்ளது.
“காட்டுக்குள் செல்ல மக்கள் அச்சப்படும் நிலையிலான ஒரு நாட்டில் நாம் வாழ முடியாது,” என்று ஸ்லோவாக்கியப் பிரதமர் ராபர்ட் ஃபிக்கோ தெரிவித்துள்ளார்.
அந்நாட்டில் மொத்தம் 79 மாவட்டங்கள் உள்ள நிலையில், கரடிகளைச் சுட்டுக்கொல்வதற்கான சிறப்பு அவசரநிலை 55 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மனித நடமாட்டமுள்ள பகுதிகளில் சுற்றித் திரியும் கரடிகளைக் கொல்லவும் அங்கு அனுமதியுண்டு. கடந்த 2024ஆம் ஆண்டு இறுதிவரை அங்கு 93 கரடிகள் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டன.
இந்நிலையில், மேலும் பல கரடிகளைக் கொல்லும் திட்டம் அனைத்துலகக் கடப்பாடுகளை மீறும் செயல் என்றும் அது சட்டவிரோதம் என்றும் கூறி, இயற்கைப் பாதுகாப்பு ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“மடத்தனமான திட்டம்,” எனச் சாடியுள்ளார் சூழலியலாளரும் ‘முன்னேறும் ஸ்லோவாக்கியா’ எனும் எதிர்க்கட்சி உறுப்பினருமான மைக்கல் வைசக்.
“பாதுகாக்கப்பட்டுவரும் இனத்தைச் சேர்ந்த இவ்வகைக் கரடிகளைக் கொல்வது, மனிதர்களைக் கரடிகள் தாக்குவதைக் கட்டுப்படுத்துவதில் சுற்றுச்சூழல் அமைச்சர் தோல்வியடைந்துவிட்டது,” என்று பிபிசி ஊடகத்திடம் திரு வைசக் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
தனது தோல்வியை மறைப்பதற்காக மேலும் பல கரடிகளைக் கொல்ல அரசு முடிவுசெய்துள்ளது என்றும் அவர் குறைகூறினார்.
கடந்த சனிக்கிழமை (மார்ச் 29) மத்திய ஸ்லோவாக்கியாவிலுள்ள ஒரு காட்டுப்பகுதிக்குள் சென்ற 59 வயது ஆடவர் மீண்டும் திரும்பவில்லை. அவர் மறுநாள் இரவு ஒரு கரடியால் கொல்லப்பட்டதைப் புதன்கிழமையன்று காவல்துறை உறுதிப்படுத்தியது.