ஏடன்: ஈரான் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், ஏமனின் ‘பெரிம்’ தீவைக் கைப்பற்ற ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை முடுக்கி விட்டுள்ளனர்.
ஏமனின் தென்மேற்குக் கடற்கரைக்கு அருகில், பாப் அல்-மந்தப் நீரிணையின் மையப் பகுதியில் அமைந்துள்ளது எரிமலைப் பாறைகள் நிறைந்த இக்குட்டித் தீவு.
செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் உலகளாவிய கடல்சார் வணிகப் பாதையின் நுழைவாயிலாக விளங்குவதால், அனைத்துலகக் கப்பல் போக்குவரத்து, கச்சா எண்ணெய் விநியோகத்தைக் கண்காணிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் இத்தீவு முக்கியப் பங்காற்றுகிறது.
ஹோர்முஸ் நீரிணை முடங்கியுள்ள நிலையில், சவூதி அரேபியா தன் கச்சா எண்ணெய் ஏற்றுமதியைச் செங்கடல் வழியாகத் திருப்பிவிட்டுள்ளது. பெரிம் தீவுக்கு வடக்கே 50 மைல் தொலைவில் உள்ள முக்கியக் கடலோர நகரமான ‘மோகா’வைக் கைப்பற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வருவதால், இச்சிறிய நீரிணை வழியாகச் செல்லும் அனைத்துலகக் கப்பல்களுக்கு ஆபத்து அதிகரித்துள்ளது.
“இது ஈரானின் திட்டம்,” என்று ஏமன் அரசாங்கத்தின் துணைத் தலைவர் தாரிக் சலே சாடினார். இத்தீவைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினால் அவர்களை வெளியேற்ற மிகப்பெரிய அனைத்துலகக் கடற்படை தேவைப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஹூதிக்களின் நகர்வு உலகளாவிய எண்ணெய் விலையை மேலும் உயர்த்தி, அமெரிக்க இடைத்தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆகஸ்ட் மாதம் மோகா துறைமுகத்தின்மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்ததுடன் பல வணிகக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. மீன்பிடிப் படகுகள் மீதான தாக்குதலால் உள்ளூர்ப் பொருளியலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் இருந்து கடத்தப்பட்ட அதிநவீன ஏவுகணைகள், ஆளில்லா வானூர்திகளை ஏமன் படைகள் பறிமுதல் செய்திருந்தாலும், ஈரானின் ராணுவ ஆதரவுக் கிளர்ச்சியாளர்களுக்குத் தொடர்ந்து ஆயுதங்கள் கிடைத்து வருகின்றன.
ஏமன் உள்நாட்டுப் போர் தற்போது அமெரிக்கா-ஈரான் இடையிலான உலகளாவிய மோதலின் முக்கியக் களமாக மாறியுள்ளது. பெரிம் தீவு கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றால், அவர்கள் நீரிணையில் கண்ணிவெடிகளைப் பதித்து அனைத்துலக வணிகத்தை முழுதாக முடக்கக்கூடும் என அனைத்துலகப் பாதுகாப்பு வல்லுர்கள் அஞ்சுகின்றனர்.

