சீனாவின் ஆக உயரமான கட்டடத்தில் மோதிய சிறு விமானம்: விமானி மரணம்

சீனாவின் ஆக உயரமான கட்டடத்தில் மோதிய சிறு விமானம்: விமானி மரணம்

2 mins read
கட்டடத்தின் அருகில் இருந்த பலர் காயம்
6d1a241d-c662-4ddb-932e-737b583a41dc
சிட்டிக் டவர் எனப்படும் கட்டடம் சைனா சுன் எனவும் மக்களால் அழைக்கப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 3

பெய்ஜிங்: சீனாவின் ஆக உயரமான கட்டடத்தின்மீது ஒரு சிறிய விமானம் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) மோதியதில் அதன் விமானி கொல்லப்பட்டார்.

அச்சம்பவத்தில் 13 பேர் காயமடைந்தனர். இதன் விவரங்களைச் சீன அதிகாரிகள் சனிக்கிழமை (ஜூன் 27) உறுதிப்படுத்தினர். விபத்து நடந்ததன் காரணத்தை அவர்கள் விளக்கவில்லை.

தலைநகர் பெய்ஜிங்கின் சாவ்யாங் வட்டாரத்தில் நடந்த அந்த விபத்தில் ஒரே இயந்திரத்தைக் கொண்ட, இருவர் அமரக்கூடிய சிறு விமானம் சம்பவ நாளன்று மாலை 5.55மணிக்கு அந்தக் கட்டடத்தை மோதியதாகச் சீன அதிகாரிகள் ‘வீசாட்’ என்ற சமூக ஊடகத்தில் பதிவிட்டனர்.

“விமானத்தில் ஒருவர் மட்டுமே இருந்தார். கட்டடத்தில் இருந்த 13 பேர் காயமடைந்தனர்,” என்று அதிகாரிகள் வெளியிட்ட அந்த முதல் அதிகாரபூர்வ அறிக்கை குறிப்பிட்டது.

விபத்து குறித்த விசாரணை நடந்துவருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மோதிய விமானம் ஒரு கார் அளவே இருந்தது எனச் சம்பவத்தை நேரில் பார்த்தோர் கூறினர்.

அந்த விபத்துக்குப் பிறகு, ‘சிட்டிக் டவர்’ என்றழைக்கப்படும் அந்த 108 மாடிக் கட்டடத்தின் அருகில் உள்ள சாலைகளைக் காவல்துறையினர் மூடிவிட்டதாகத் தெரிகிறது.

சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான சிட்டிக் வர்த்தக் குழுமத்தின் தலைமையகம் அக்கட்டடத்தில் அமைந்துள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

கட்டடத்தின் அருகே சென்ற பொதுமக்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாகவும் கைப்பேசிகளைக் கொண்டு புகைப்படம் எடுத்தோரை அவற்றை அழித்துவிடும்படி அவர்கள் வலியுறுத்தியதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.

விமானம் மோதியதில் கட்டடத்தின் மேல்மாடியில் உள்ள இரு கண்ணாடி சன்னல்கள் சேதமடைந்தன. பெய்ஜிங்கின் நகராட்சி மன்றம் ராய்ட்டர்ஸ் ஊடகத்தின் கேள்விகளுக்கு உடனடியாகப் பதில் அளிக்கவில்லை.

வாணவேடிக்கையின் சத்தத்தைவிட மிகப் பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகச் சம்பவ இடத்தின் அருகில் இருந்தோர் விவரித்தனர்.

சீனாவின் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட விபத்தின் பல பதிவுகள் பிறகு அகற்றப்பட்டுவிட்டன. விபத்தில் காயமுற்றோர் குறித்து எவ்வித விவரங்களும் வெளியிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்
சீனாவிமானம்மோதல்விபத்துசமூக ஊடகம்காவல்துறை