பெய்ஜிங்: திறன்பேசிச் சந்தை உலக அளவில் ஆண்டு அடிப்படையில் வரலாறு காணாத சரிவை நோக்கிச் செல்கிறது என்று கவுன்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் திங்கட்கிழமை (ஜூன் 1) தெரிவித்திருக்கிறது.
இவ்வாண்டு திறன்பேசிகளின் ஏற்றுமதி 13.9 விழுக்காடு குறையக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. கணினிச் சில்லுகளுக்கான பற்றாக்குறை மோசமடைந்திருப்பது காரணமாகச் சொல்லப்பட்டது.
இதற்கு முன்னர் பிப்ரவரியில் முன்னுரைக்கப்பட்ட 12.4 விழுக்காட்டைவிட அண்மைக் கணிப்பு இன்னும் குறைந்துள்ளது. ஈரான் போரால், உலக அளவிலான கணினிச் சில்லுகளின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
அதனால் விலை குறைந்த திறன்பேசிகளில் தாக்கம் அதிகம். சில்லு உற்பத்தியாளர்கள் விலையுயர்ந்த திறன்பேசிகளுக்குத் தேவையான செயற்கை நுண்ணறிவுச் (ஏஐ) சில்லுகளைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டனர். அதனால், ஒப்பீட்டளவில் விலை குறைந்த திறன்பேசிகளைத் தயாரிப்பதால் செலவு அதிகம்.
உலக அளவில் திறன்பேசிகளின் மொத்த விற்பனை விலை முதல் காலாண்டில் 14 விழுக்காடு கூடியது. ஆண்டு அடிப்படையில் அவற்றின் ஏற்றுமதி 3.1 விழுக்காடு குறைந்தது.
அந்தப் போக்குத் தொடருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 150 அமெரிக்க டாலருக்குக் ($192) குறைவான திறன்பேசிகளை இனிமேல் சந்தையில் பார்க்கமுடியாது என்ற கருத்தும் நிலவுகிறது.
“குறைந்த, நடுத்தர விலைத் திறன்பேசிகளைத் தயாரிப்போர், மிதமிஞ்சிய செலவுக்கும் அவற்றை வாங்க விரும்புவோருக்கும் இடையில் சிக்கியுள்ளனர்,” என்று கவுன்டர்பாயின்டின் முதன்மை ஆய்வாளர் வாங் யாங் கூறினார்.
“இனி கேள்வி ஏற்றுமதியை அல்லது சந்தைப் பங்கை எவ்வாறு அதிகரிப்பது என்பதன்று. மாறாக, சந்தையில் தொடர்ந்து நீடிக்க முடியுமா என்பதுதான்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், முன்னணி நிறுவனங்கள் நிலைமையைச் சமாளித்து வருகின்றன.
ஆப்பிள் நிறுவனம் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு வருமானத்தை ஈட்டியுள்ளது. ஐஃபோன் 17 வகைத் திறன்பேசிகளை ஏராளமான பயனீட்டாளர்கள் வாங்கியதே அதற்குக் காரணம். அதன் திறன்பேசிகளின் ஏற்றுமதி இவ்வாண்டு மாற்றமின்றி இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு 5 விழுக்காடு அதிகரிக்கும் என்றும் கவுன்டர்பாயின்ட் முன்னுரைக்கிறது.
சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதியும் முதல் காலாண்டில் நிலையாக இருந்தது. இவ்வாண்டு முழுமைக்கும் திறன்பேசிகளின் ஏற்றுமதி 4 விழுக்காடு குறையக்கூடும் என்று கவுன்டர்பாயின்ட் கணிக்கிறது.

