பேங்காக்: ஜோகூர் பாருவில் இருந்து பேங்காக் சென்ற பாடிக் ஏர் விமானத்திற்குள் திடீரெனப் புகை சூழ்ந்தது. விமானம் தரையிறங்குவதற்கு கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு முன் இது நடந்தது. அப்போது விமானத்தில் 100க்கும் அதிகமான பயணிகளுடன் சிப்பந்திகளும் இருந்தனர்.
கடந்த மாதம் 24ஆம் தேதி இச்சம்பவம் நடந்தது. கைப்பேசிக்கான கையடக்க மின்னூட்டி (Power bank) எரிந்ததால் விமானத்திற்குள் புகை ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
கென்ட்மாஹெர் என்னும் இணையவாசி டிக்டாக் தளத்தில் பதிவிட்ட இது தொடர்பான காணொளி தற்போது 2.1 மில்லியனுக்கு அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. காணொளியில் விமானத்தின் முன்பகுதியில் பயணிகள் இருக்கைக்கு மேல் உள்ள பெட்டிகள் வைக்கும் இடத்திலிருந்து அதிக புகை வருவதைக் காணமுடிந்தது.
“பெட்டி இருக்கும் இடத்திலிருந்து புகை வெளியேறுவதைக் கண்டதும் பயணிகள் அனைவரும் அச்சமடைந்தோம், தீ எரிவதுபோலவும் உணர்ந்தோம்,” என்று கென்ட்மாஹெர் தமது காணொளியில் குறிப்பிட்டார்.
காணொளியில் மூன்று விமானச் சிப்பந்திகள் எங்கு தீ ஏற்பட்டது என்பதை அறியப் பெட்டிகள் இருக்கும் இடத்தில் வேகமாகச் சோதனையிட்டதைப் பார்க்க முடிந்தது.
தீ எங்கு ஏற்பட்டது என்பதை அறிந்தவுடன் பாதிக்கப்பட்ட இடத்திற்கு கீழ் அமர்ந்திருந்த பயணிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். பின்னர் தீயணைப்பானைக் கொண்டு தீ அணைக்கப்பட்டது.
விமானச் சிப்பந்திகள் வேகமாகச் செயல்பட்டதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாக கென்ட்மாஹெர் கூறினார்.
விமானம் தரையிறங்கியபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தின் தீயணைப்பு பிரிவு, அவசர உதவி வாகனங்கள் எனப் பாதுகாப்பு தொடர்பான அனைத்துச் சேவைகளும் தயார் நிலையில் இருந்தன.