திரையரங்குக்குப் படம் பார்க்கச் சென்ற ஒரு பெண், பாம்புக் கடிக்கு ஆளானார்.
குடும்பத்தாருடன் ஜூலை 31ஆம் தேதி கடைத்தொகுதியில் அமைந்துள்ள திரையரங்குக்குச் சென்றபோது பாம்பு அவரது காலைப் பதம் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
படம் பார்க்கும்போது தமது காலணிகளை 27 வயது கோர்ன்ஃபாபிபோர்ன் பொக்-இம்சின் அகற்றினார். திடீரென்று அவரது கால்களில் ஏதோ ஊர்ந்து செல்வதை உணர்ந்தார்.
அதையடுத்து அவர் தமது கால்களை உதறினார். அப்போது, இடது பாதத்தில் சுருக்கென்ற வலி அவருக்கு ஏற்பட்டது. பாம்பு கடித்தது போன்று இரண்டு சிவப்புப் புள்ளிகளைத் தமது பாதத்தில் பார்த்தார்.
திரையரங்கப் பணியாளர்களிடம் அவர் இதுகுறித்து தகவல் தெரிவித்தபோது அவர்கள் முதலுதவி வழங்கினர். பின்னர், அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றார்.
தாம் விஷப் பாம்பால் கடிக்கப்பட்டதாக மருத்துவர் அவரிடம் கூறியுள்ளார். சிகிச்சை வழங்கப்பட்டதை அடுத்து அவர் 25,000 பாட் (S$982.38) மருத்துவக் கட்டணத்தைச் செலுத்தினார்.
அதன் பின்னர், காவல்துறையிடம் புகார் அளித்து, மருத்துவக் கட்டணத்தைத் தம்மிடம் திருப்பிக் கொடுக்குமாறு பலமுறை கோரியபின்னர் திரையரங்க உரிமையாளரிடமிருந்து பணத்தைப் பெற்றார்.
இச்சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், திரையரங்கத்தை நடத்துபவரிடம் அந்தப் பெண் தற்போது கூடுதல் இழப்பீட்டுத் தொகையைக் கோரியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
திரையரங்க நிறுவனம் தமக்கு 6,990 பாட் (S$274.55) தொகையைத் தருவதாக செப்டம்பர் 23ஆம் தேதி கூறியது.
இருப்பினும், தமக்குக் கூடுதல் இழப்பீட்டுத் தொகை தேவைப்படுவதாகக் கூறியுள்ளார் இவர்.
இது தொடர்பாக அந்தப் பெண் உள்துறை அமைச்சுடன் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தும் உள்ளார்.
காவல்துறையுடன் உள்துறை அமைச்சு இணைந்து பணியாற்றி இதற்குத் தீர்வு காணும் என்று கூறப்படுகிறது.

