ஜார்ஜ்டவுன்: மலேசியாவில் 2025ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 140,000 பாம்பு பிடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மலேசியக் குடிமைத் தற்காப்புப் படையின் (APM) துணைத் தலைமை ஆணையர் கசாலி அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அதிகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்றாக குடியிருப்புப் பகுதிகளில் பாம்பு பிடிப்பது உள்ளது என்ற அவர், சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் அதிக பாம்புகள் பிடிக்கப்பட்டதாகக் கூறினார்.
சராசரியாக ஒரு மாநிலத்திற்கு ஆண்டுக்கு 10,000 சம்பவங்கள் பதிவாவதாகக் குறிப்பிட்ட திரு கசாலி, பினாங்கில் மட்டும் கடந்த ஆண்டில் 8,193 வழக்குகள் பதிவாகியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
நகரமயமாக்கலுக்காக காடுகள் அழிக்கப்படுவதும் தற்போதைய கடும் வெப்பமான காலநிலையும் பாம்புகள் மனித குடியிருப்புகளுக்குள் நுழைய முக்கியக் காரணங்கள். இயற்கையான வாழ்விடங்கள் பாதிக்கப்படுவதால், குளிர்ச்சியான இடத்தையும் உணவையும் தேடிப் பாம்புகள் வீடுகளுக்குள் தஞ்சம் புகுகின்றன என்று தெரிவிக்கப்பட்டன.
காடுகளுக்கு அருகேயுள்ள குடியிருப்புகள், புதிய மேம்பாடுகள், பசுமைப் பகுதிகளில் இப்பிரச்சினை அதிகமாக உள்ளது.
ஒரு பாம்பை அகற்றினால் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒன்று அல்லது பல குடும்பங்களைக் காப்பாற்ற முடியும் என்பதால் பாம்பு பிடித்தல் நடவடிக்கைகளை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று திரு கசாலி கூறினார்.
விபத்துகள் மிகக் குறைவாகவே உள்ளபோதும் அதிகாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்த நவீன உபகரணங்கள், சிறப்புப் பயிற்சிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

