பேங்காக்: தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் பும்தாம் வெஜெயசாய், புதன்கிழமையன்று (செப்டம்பர் 3), நாடாளுமன்றத்தைக் கலைக்க வலியுறுத்தியுள்ளதாக அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
அந்நாட்டின் ஆகப் பெரிய எதிர்க்கட்சி, எதிர்த்தரப்புப் போட்டியாளர் ஒருவருக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து அவர் அவ்வாறு வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் தாய்லாந்தில் முன்கூட்டியே தேர்தல் நடைபெறக்கூடும். 2023ஆம் ஆண்டு மே மாதம் தாய்லாந்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை, திருவாட்டி பெடோங்டார்ன் ஷினவாத் பதவி நீக்கம் செய்யப்பட்டார். நெறிமுறை மீறல் தொடர்பில் அரசமைப்பு நீதிமன்றம் அவரைப் பதவியிலிருந்து நீக்கியது.
அவரது பியூ தாய் கட்சி, பராமரிப்பு அரசாங்கத்தை நடத்திவருகிறது. பிரதமர் பதவிக்கான தனது புதிய வேட்பாளரை ஆதரிக்கும்படி மக்கள் கட்சியிடம் அது பேச்சு நடத்தியது. ஆனால், பழமைவாத பூம்ஜைதாய் கட்சியின் வேட்பாளரான பெருஞ்செல்வந்தர் அனுடின் சர்ன்விராகுலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது மக்கள் கட்சி.
அதையடுத்து, தற்காலிகப் பிரதமர் நாடாளுமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டதாகப் பியூ தாய் கட்சியின் தலைமைச் செயலாளர் சோரவோங் தியென்தோங் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இருப்பினும், பராமரிப்பு அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இருக்கிறதா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.
தாய்லாந்தின் அரசமைப்புச் சட்டத்தின்கீழ், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு மன்னர் ஒப்புதல் வழங்கினால், அதன் பின்னர் 45 முதல் 60 நாள்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், அடுத்த சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறக்கூடும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.
தற்போதைய சூழலில் வழக்கமான அரசாங்கத்தை அமைப்பது சாத்தியமில்லை என்பதால் பொதுத் தேர்தல்தான் சிறந்த தீர்வாக அமையக்கூடும் என்பது அவர்களின் கருத்து.
இவ்வேளையில், நான்கு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கலைக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் திரு அனுடினுக்கு ஆதரவு வழங்குவதாக மக்கள் கட்சி கூறுகிறது. தாய்லாந்து நாடாளுமன்றத்தில் அக்கட்சியினர் 143 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
திரு அனுடின், ஏற்கெனவே துணைப் பிரதமர், உள்துறை அமைச்சர், சுகாதார அமைச்சர் போன்ற பொறுப்புகளை வகித்தவர்.

