பதின்ம வயதினருக்குச் சமூக ஊடகத் தடை; பிரிட்டன் பரிசீலனை

1 mins read
0a9ccf63-159c-4126-ae55-397f4f9ab9da
குறிப்பிட்ட வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் கைப்பேசிகளைப் பயன்படுத்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படலாம். - படம்: ஏஎஃப்பி

லண்டன்: ஆஸ்திரேலியாவைப் போலப் பிரிட்டனிலும் பதின்ம வயதினர் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படலாம். பிள்ளைகளை இணையத்திலிருந்து காக்கப் பிரிட்டன் பல்வேறு நடவடிக்கைகளைப் பரிசீலித்து வருகிறது. குறிப்பிட்ட வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் கைப்பேசிகளைப் பயன்படுத்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படலாம்.  “உலக நாடுகள் பல, பிள்ளைகள் கைப்பேசிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கியுள்ளன. அவற்றை நாங்களும் கூர்ந்து கவனித்து வருகிறோம். போதுமான அளவு தரவுகள் கிடைத்துவிட்டால் முடிவு எடுப்போம்,” என்று பிரிட்டன் அரசாங்கம் திங்கட்கிழமை (ஜனவரி 19) தெரிவித்தது.  பிள்ளைகள் சமூக ஊடகத்தைத் தவிர்ப்பதன்மூலம் நடக்கும் நன்மைகள், திட்டத்தின் செயல்முறை, திட்டத்தை எவ்வாறு மேம்படுத்துவது உள்ளிட்டவற்றையும் பிரிட்டன் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.   இதற்கிடையே, ஆஸ்திரேலியாவுக்குப் பிரிட்டன் அமைச்சர்கள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.  ஆஸ்திரேலியாவின் தடை எவ்வாறு செயல்படுகிறது என்பதை அமைச்சர்கள் அறிந்துகொள்வார் என்று பிரிட்டன் அரசாங்கம் குறிப்பிட்டது.  சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும் வயது வரம்பு குறித்து பிரிட்டன் தகவல் வெளியிடவில்லை. இருப்பினும், அது ஒரு குறிப்பிட்ட வயது வரம்பை நிர்ணயிக்கத் திட்டமிட்டுவருகிறது.  அதேபோல் பிள்ளைகளின் வயதைச் சரிபார்ப்பது, இணையத்தைக் கையாள போதுமான வயது உள்ளதா என்பது தொடர்பான கட்டமைப்பு நடவடிக்கைகளையும் பிரிட்டன் ஆராய்ந்து வருகிறது. பிள்ளைகள் அதிகமாகக் கைப்பேசிகளைப் பயன்படுத்துவதால் மனநலம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்று பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து உலக நாடுகள் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன.  தற்போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தளங்களும் பிள்ளைகளுக்குத் தேவையில்லாத பல விவரங்களைக் கொடுக்கிறது என்பதால் அதை உலக நாடுகள் கண்காணித்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்