மியாமி, ஃபுளோரிடா: இரண்டு முறை உலகக் குத்துச் சண்டையில் தலைசிறந்த வீரர் என்ற பட்டத்தைப் பெற்ற பிரிட்டனின் 36 வயது அந்தனி ஜோஷுவா, அவரை எதிர்த்து போட்டியிட்ட சமூக ஊடகப் பிரபலமான அமெரிக்கர் ஜேக் பாலை, ஆறாம் சுற்றில் வீழ்த்தி வெற்றிபெற்றார்.
குத்துச் சண்டை அமெரிக்காவின் மியாமி மாநிலத்தில் ஃபுளோரிடா நகரில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) நடந்தது.
ஜோஷுவா, 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலும் பிறகு மீண்டும் 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையிலும் உலக கனரக குத்துச் சண்டை ‘சாம்பியன்’ என்ற தலைசிறந்த வீரர் பட்டத்தைப் இருமுறை பெற்றவர்.
தொழில்முறை குத்துச்சண்டைகளில் இதுவரை அவர் 33 போட்டிகளில் சண்டையிட்டு 26 முறை வெற்றிபெற்று நான்கு தோல்விகளைச் சந்தித்தவர்.
ஜேக் பால், 28 வயதானவர். சமூக ஊடகங்களில் அவர் 2013 முதல் பதிவுகளைச் செய்யத் தொடங்கினார். அவரை மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் தொடர்கின்றனர். அவரது காணொளிகள் பில்லியன் அளவில் காணப்பட்டுள்ளன.
இசைத் தயாரிப்பிலும் முத்திரை பதித்துள்ள அவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். குத்துச்சண்டையில் அவர் இதுவரை 14 தொழில்முறைப் போட்டிகளில் பங்கேற்று 12 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
குறிப்பாக கடந்த 2024ஆம் ஆண்டில், குத்துச் சண்டை வரலாறு படைத்த மைக் டைசனுடன் மோதி ஜேக் பால் வெற்றியும் பெற்றார்.
தொடர்புடைய செய்திகள்
பதினைந்து மாதம் விலகியிருந்து மீண்டும் போட்டியிடும் ஜோஷுவாவை முதல் நான்கு சுற்றுகளில் ஜேக்பால் திறமையாக தவிர்த்து வந்தார். ஆனால் ஐந்து, ஆறாம் சுற்றுகளில் ஜோஷுவா தாக்குதலை தீவிரப்படுத்தி ஜேக்கை மீண்டு வரமுடியாமல் வீழ்த்தினார்.
ஜேக் பால் வெளிப்படுத்திய தைரியத்தையும் விடாமுயற்சியையும் போட்டி முடிந்ததும் அந்தனி ஜோஷுவா பாராட்டினார். தனது தாடை இரண்டாக உடைந்துவிட்டதாக வலியிலும் சிரித்தபடி ஜேக் பால் குறிப்பிட்டார்.
இந்தப் போட்டியை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் நேரடியாக 300 மில்லியன் சந்தாதாரர்களுக்கு ஒளிபரப்பியது.

