மென்பொருள் ஊடுருவல்: கெத்தே பசிபிக் விமான சேவையின் தரவுகள் களவாடல்

மென்பொருள் ஊடுருவல்: கெத்தே பசிபிக் விமான சேவையின் தரவுகள் களவாடல்

படம்: கெத்தே பசிபிக்

30 Oct 2026 - 8:43 pm

2 mins read

ஹாங்காங்: மென்பொருள் ஊடுருவலால் தரவுகள் களவாடப்பட்ட உலகளாவிய விமானச் சேவைகளின் பட்டியலில் தற்போது ஹாங்காங்கின் கெத்தே பசிபிக் நிறுவனமும் சேர்க்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் மென்பொருள் தரவுகளை நிர்வகித்து வரும் ‘அமெடியஸ் ஐடி’ குழுமத்தின் மின்னியல் கட்டமைப்பு ஊடுருவப்பட்டு, விமானப் பயணத்துக்கான 53,000 முன்பதிவுகள் பாதிக்கப்பட்டதாகக் கெத்தே பசிபிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தச் செயல்பாடுகள் 2023 ஆகஸ்ட் மாதம் தொடங்கி, இவ்வாண்டு செப்டம்பர் வரை நிகழ்ந்துள்ளன.

பாதிக்கப்பட்ட தரவுகளினால் முன்பதிவுகளுக்கான பரிந்துரைகள், பயணிகள் பெயர், விமானப் பயண விவரம் போன்ற விவரங்கள் களவுபோயுள்ளன. சில தரவுகளில் மின்னஞ்சல், தொலைபேசி தொடர்பு எண்கள், கடப்பிதழ் தகவல்கள் போன்றவை இருந்திருக்கலாம் எனவும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) கெத்தே பசிபிக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்ந்து விசாரிக்கப்படுவதாகவும், நிறுவனத்தின் செயல்பாடுகளும் கட்டமைப்புகளும் பாதிக்கப்படவில்லை எனவும் கெத்தே பசிபிக் உறுதிசெய்தது.

அமெடியஸ் ஐடி குழுமத்தில் நடந்த இந்த ஊடுருவல் போல அது நிர்வகித்துவரும் பல முக்கிய விமான சேவைகளிலும் தரவுக் களவு நடந்துள்ளது.

ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 92,000 பயணிகளின் விவரங்கள் இணையத் தாக்குதலில் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் திருடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஜப்பானின் ஏஎன்ஏ விமான நிறுவனம் அதன் 37,800 பயணிகள் விவரம் பகிரப்பட்டதாக தெரிவித்தது.

கொரியன் ஏர்லைன்ஸ், ஜெர்மனியின் கொன்டொர் விமான சேவைகளும் தரவுகள் களவு போனதை அறிவித்தன. அமெடியஸ் ஐடி குழுமத்தின் மென்பொருள் சேவையைப் பயன்படுத்தும் உலகின் மேலும் பல விமான சேவைகள் தரவுக் களவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்