லெய்ட் (பிலிப்பீன்ஸ்): பிலிப்பீன்சில் கொளுத்தும் வெயிலில் குறுகலான நடைபாதை ஒன்றின் மீது, கீழே பாங்கோன் ஆறு ஓட, நீர் எருமை ஒன்றை அதன் உரிமையாளர் நடத்திச் செல்கிறார்.
அந்த மேம்பாலம் 2018ஆம் ஆண்டு வெள்ளத் தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டது. அதன் பயனாக பிலிப்பீன்சின் பண்டைய கிராமமான சான் மிகுவேலேயும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் வெள்ளம் கரை புரண்டோடி அங்கிருக்கும் விளைநிலங்களைப் பாழ்படுத்துவது தடுத்து நிறுத்தப்பட்டது.
நீர் எருமையை அதன் உரிமையாளர் வழிநடத்திச் செல்வதை 38 வயது நிரம்பிய அந்த கிராமத் தலைவர் எரிக் ரோக்கா பார்த்து தலையசைத்தார்.
“அந்தப் பாலம் எங்களுக்கு உயிர்காப்புத் திட்டமாக அமைந்துள்ளது,” என்று கூறும் திரு ரோக்கா, “எஃப் எம் ரோமுவல்டெஸ் மற்றும் டிங்காக் ஆகியோரின் சேவை பாராட்டத்தக்கது,” என்றார்.
அவர் குறிப்பிட்டுப் பாராட்டியது பிலிப்பீன்ஸ் நாடாளுமன்ற நாயகரான திரு ஃபெர்டினண்ட் மார்டின் ரோமுவல்டெஸ் என்பவரை. இவர் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோசின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார். அத்துடன் திரு ரோக்கா குறிப்பிட்ட டிங்காக் என்பது திரு ரோமுவல்டெஸ் தொடர்புடைய அரசியல் கட்சிப் பிரிவாகும்.
பிலிப்பீன்சில் 1987ஆம் ஆண்டு அரசியல் கட்சிப் பிரிவு முறை (party-list groups). அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகங்களையும் வசதி குறைந்த பிரிவினரையும் பிரதிநிதிக்கும் குழுக்களுக்கு நாட்டின் பிரதிநிதிகள் சபையில் 20 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
இது அந்நாட்டு ஆதிவாசிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் போன்றோர் தங்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் வாய்ப்பை அரசியல் பிரபலங்களுக்கு ஈடாகப் பெற்றனர்.
ஆனால், கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பின்னரும், அரசியல் வாரிசுகளைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட இந்த முறையை ஏற்கெனவே உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் வாரிசுகளை அரசியலுக்குக் கொண்டுவர பயன்படுத்தி வருகின்றன. பிலிப்பீன்சில் கிட்டத்தட்ட 200 அரசியல் குடும்பங்கள் இருப்பதாக கல்வியாளர்களின் கணிப்புகள் காட்டுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
அரசியல் கட்சிப் பிரிவுக் குழுக்களில் இடம்பெறும் கட்சிகள் தங்கள் வாரிசுகளை தேர்தலில் முன்னிறுத்தி அரசாங்கத்தில் தங்களுக்கு உள்ள செல்வாக்கை ரோமுவல்டெஸ் போன்றோர் வளர்த்துக்கொள்கின்றனர்.
இதனால், அரசு பிரதிநிதித்துவம் இல்லாத அல்லது புதியவர்கள் அரசியலுக்கு வருவது தடைபடுவதாகக் கூறப்படுகிறது.