புத்ராஜெயா: வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு எதிரான கடுமையான அமலாக்க நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக, வெளிநாட்டினர் சிலர் ஒற்றைத் தாய்மார்கள், கணவரை இழந்த பெண்கள் உள்ளிட்ட மூத்த மலேசிய மாதரைத் திருமணம் செய்துகொண்டு, மனைவியின் பெயரில் வாகனங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.
சாலைப் போக்குவரத்துத் துறையின் (ஆர்டிடி) அமலாக்கப் பிரிவு மூத்த இயக்குநர் முகமது கிஃப்லி மா ஹசான் அந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
வாகனப் பதிவுக்குத் தங்களின் பெயரைப் பயன்படுத்த அனுமதிப்பதற்கு ஈடாக, 60 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய மலேசிய மாதரைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, அவர்களைக் குறிவைத்து வெளிநாட்டினர் சிலர் செயல்படுவது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
கடந்த ஜூலை மாதம் முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ள அமலாக்க நடவடிக்கைகளுக்குப் பதில் நடிவடிக்கையாக, வெளிநாட்டு ஓட்டுநர்களால் கையாளப்படும் ஒரு புதிய உத்தி அது என்றும் அவர் சொன்னார்.
“இந்த வெளிநாட்டினர் 60 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய மாதரை, குறிப்பாக ஒற்றைத் தாய்மார்கள், கணவரை இழந்த பெண்கள், திருமணம் ஆகாத பெண்கள் ஆகியோரைக் குறிவைக்கின்றனர்.
“வாகனப் பதிவுக்குத் தங்களின் பெயரைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு அவர்களை இணங்க வைக்க, அந்த வெளிநாட்டினர் இனிமையான திருமண வாக்குறுதிகளை அளிக்கின்றனர்,“ என்று அவர் குறிப்பிட்டார்.
கடுமையாக்கப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளின்கீழ், குற்றச்செயல்கள் கண்டறியப்பட்டால் வெளிநாட்டு ஓட்டுநர், வாகன உரிமையாளர் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
