சிங்கப்பூரில் வேலை செய்வதற்காக தேர்வைத் தவிர்த்த மாணவர்கள்

2 mins read
7f125de3-8a70-4a9c-84b0-0584322b22ca
தேர்ச்சி குறைவாகத் தேவைப்படும் வேலைகளாக இருந்தபோதிலும் ஊதியம் அதிகம் என்பதால் அம்மாணவர்கள் சிங்கப்பூரில் வேலைக்குச் செல்ல முடிவெடுத்ததாக ஜோகூர் மாநிலக் கல்விக் குழு உறுப்பினர் அஸ்னான் தமின் கூறினார். - படம்: ஃபிரீ மலேசியா டுடே

ஜோகூர் பாரு: மலேசியக் கல்விச் சான்றிதழ் (எஸ்பிஎம்) தேர்வெழுத வேண்டிய 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் அம்முக்கியத் தேர்வை எழுதச் செல்லவில்லை.

அதற்குப் பதிலாக, அவர்களில் சிலர் சிங்கப்பூரில் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தனர்.

தேர்ச்சி குறைவாகத் தேவைப்படும் வேலைகளாக இருந்தபோதிலும் ஊதியம் அதிகம் என்பதால் அம்மாணவர்கள் சிங்கப்பூரில் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தனர் என்று மாநிலக் கல்விக் குழு உறுப்பினர் அஸ்னான் தமின் கூறியதாக உத்துசான் மலேசியா ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

அதே நேரத்தில், ஜோகூரில் சென்ற ஆண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதாத மாணவர்களைவிட இம்முறை அப்படிச் செய்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவு என்று திரு தமின் குறிப்பிட்டார்.

ஆயினும், இது கவலை தரும் போக்கு என்றார் அவர்.

“சிங்கப்பூரில் வேலை செய்ய எஸ்பிஎம் சான்றிதழ் கட்டாயமாக்கப்படாததே நாங்கள் எதிர்கொள்ளும் சவால். தங்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதில் எஸ்பிஎம் சான்றிதழின் முக்கியத்துவம் குறித்துப் பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் பள்ளிகள் வலியுறுத்த வேண்டும்,” என்று திரு தமின் விளக்கினார்.

கடந்த ஆண்டில் 97 விழுக்காட்டு மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வு எழுதினர் என்றும் ஏறக்குறைய 10,000 மாணவர்கள் அதனைத் தவிர்த்தனர் என்றும் மலேசியக் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிதெக் தெரிவித்திருந்தார்.

ஒவ்வொரு நாளும் 300,000க்கும் மேற்பட்டோர் எல்லையைக் கடந்து சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்று வருகின்றனர். அவர்களில் பலர் துப்புரவு போன்ற தேர்ச்சி குறைவாகத் தேவைப்படும் வேலைகளைச் செய்வதாகச் சொல்லப்படுகிறது.

சிங்கப்பூரில் இருந்தபடி வேலைசெய்யும் மலேசியர்களில் மூன்றில் இரு பங்கினர் மாதச் சம்பளமாக $1,500 முதல் $3,599 வரை ஈட்டுகின்றனர் என்று புள்ளிவிவரத்துறை கடந்த 2024 பிப்ரவரியில் தெரிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்