யங்கூன்: மியன்மாரின் முன்னாள் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூச்சியின் மகன் கிம் ஐரிஸ், காவலில் வைக்கப்பட்டுள்ள தமது தாயாரிடம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாய்ப் பேச அனுமதிக்கப்பட்டதாக வியாழக்கிழமை (அக்டோபர் 22) தெரிவித்துள்ளார்.
“ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று எனது தாயாருடன் பேச முடிந்தது. அவரது குரலை மீண்டும் கேட்டது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது,“ என்று திரு கிம் ஐரிஸ், ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தில் இருந்து சூச்சி அம்மையாரை ராணுவம் அகற்றியது. அதன் பின்னர் மியன்மார் அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்ட அவர், தலைநகர் நேப்பிடோவில் தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மியன்மாருக்கு ஜனநாயகத்தைக் கொண்டுவர எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்காக 1991ஆம் ஆண்டு அமைதிக்கான நோபெல் பரிசு பெற்ற தமது தாயாரிடம், பிரிட்டனில் வசிக்கும் ஐரிஸ் எவ்வாறு பேசினார் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
இருப்பினும், ஃபேஸ்புக் பதிவில் அவர் பகிர்ந்துள்ள நிழற்படங்களில், லண்டனில் உள்ள மியன்மார்த் தூதரகத்திற்கு வெளியே அவர் நிற்பது போல் தெரிகிறது.
“எனக்கும் எனது தாயாருக்கும் ஆதரவாக நின்ற அனைவருக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது குரல்கள்தாம் இந்தத் தருணத்தைச் சாத்தியமாக்க உதவியது என்று நான் நம்புகிறேன்,” என்று திரு கிம் குறிப்பிட்டுள்ளார்.
“என் தாயாருக்கு 81 வயதாகிறது; அவர் இன்னும் அநியாயமாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஒரு முறை பேசியது என்பது வழக்கமான குடும்பத் தொடர்பாகிவிடாது,” என்றார் அவர்.
