பேரிடருக்குப் பிறகு சுமத்ராவில் ஒலித்த தேவாலய மணியோசை

1 mins read
1289c8d9-29b4-4567-a24a-32428f9895c5
சுமத்ராவின் தென்பகுதியில் உள்ள தபாநுலி மாநிலத்தில் அயெக் ஙாடொல் கிராமவாசிகள் சிலர் கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25ஆம் தேதி, ஒன்றிணைந்து பிரார்த்தனைக் கூட்டம் நடத்தினர். - படம்: ஏஎஃபி

தென் தபாநுலி/சுமத்ரா: பெருவெள்ளமும் நிலச்சரிவும் தாக்கி, சுமத்ரா தீவு மீண்டுவரும் வேளையில் அங்குள்ள ஒரு கிராமத்தில் கிறிஸ்துமஸ் நாளான வியாழக்கிழமை (டிசம்பர் 25) இடிபாடுகளுக்கு இடையே இருக்கும் தேவாலயத்தில் பிரார்த்தனைக்கான மணியோசை ஒலித்துள்ளது.

பலத்த சேதமடைந்துள்ள சுமத்ராவின் தென்பகுதியில் உள்ள தபாநுலி மாநிலத்தில் அயெக் ஙாடொல் என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள கிராமவாசிகள் ‘அங்கோலா பிராடஸ்டன்ட் சர்ச்’ என்று அழைக்கப்படும் தேவாலயத்தில் பலூன்களைக் கொண்டு எளிய அலங்காரங்கள் செய்து பிரார்த்தனைக் கூட்டம் நடத்தினர்.

தேவாலயத்தின் வெளிப்புறத்தில் இடிபாடுகள் மலைபோல் குவிந்துள்ள நிலையிலும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவாலயத்தில் வழக்கமாக வழிபாடுகளில் கலந்துகொள்ளும் சபையினர் நான்கு வாரங்களுக்கு முன்பு நடந்த பேரிடர்களால் தற்காலிக முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். எஞ்சிய சுமார் 30 கிராமவாசிகள் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டனர்.

மேலும் தேவாலயத்துக்குள் புகுந்திருந்த பெருமளவிலான சேற்றை கிராமவாசிகள், ராணுவத்தினர், காவல்துறையினர் ஆகியோர் வெளியேற்றியுள்ளனர்.

அங்கோலா திருச்சபையின் பாதிரியார் யன்சன் ரோபர்ட்டோ ரிட்டொங்கா, கிறிஸ்துமஸ் பிரார்த்தனை வழக்கமாக மாலை நேரங்களில் நடக்கும், இருப்பினும் மழை எதிர்பார்க்கப்பட்டதால் காலையில் வழிபாடு செய்தோம் என்று கூறினார்.

இந்தோனீசியாவில் நடந்த பெருவெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றில் இதுவரை 1,129பேர் மரணமடைந்துள்ளனர், 17நபர்களை இன்னும் காணவில்லை என்று இந்தோனீசியாவின் தேசியப் பேரிடர் தணிப்பு முகவை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்