மணிலா: தென் சீனக் கடலில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நடத்தை விதிகள் தொடர்பாக ஆசியானுக்கும் சீனாவுக்கும் இடையிலான தற்காலிக உடன்பாடு கிட்டத்தட்ட 80 விழுக்காட்டை எட்டியுள்ளது.
இருப்பினும், இந்த ஆண்டுக்குள் பேச்சுவார்த்தைகளை முடிக்கவேண்டும் என்ற முந்தைய உறுதிமொழி இன்னும் எட்டப்படவில்லை என்று பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சர் மரியா தெரசா லசாரோ கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) செய்தியாளர் சந்திப்பில் கூறிய லசாரோ, இந்த ஆண்டின் இறுதிக்குள் உடன்பாட்டை முடிக்கலாம் என மணிலா நம்பியிருந்த நிலையில், அதனை நிறைவு செய்வதற்கான காலக்கெடு எதுவும் உறுதியாகக் குறிப்பிடப்படவில்லை என்றார்.
அதற்குப் பதிலாக, செயல்திறன் மிக்க, சாராம்சமான நடத்தை விதிகளை விரைவில் உருவாக்கும் பணியைத் தொடர இருதரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
தென் சீனக் கடலில் நிலவும் முரண்பட்ட உரிமைகோரல்கள் தொடர்பான பதற்றங்களுக்கு மத்தியில், 49வது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்காக மணிலாவில் ஆசியான் தலைவர்கள் கூடியிருக்கும் வேளையில் பிலிப்பீன்சின் இந்த அறிவிப்பு வெளியானது.
தென் சீனக் கடல் விவகாரத்தில் எஞ்சியுள்ள நான்கு முக்கிய விவகாரங்களில் ஒன்றில் மட்டும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் திருவாட்டி லாசரோ தெரிவித்தார்.
