தென்சீனக் கடல்: ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியக் கருத்துகளை மறுத்த சீனா

தென்சீனக் கடல்: ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியக் கருத்துகளை மறுத்த சீனா

2 mins read
940e223f-3973-46fb-ba48-92f9cd137656
தென்சீனக் கடல் பகுதியில் சில நாள்களுக்கு முன்பு காணப்பட்ட சீன, ஜப்பானிய மீன்டிப் படகுகள். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தின் சந்திப்பில் தென்சீனக் கடலைப் பற்றி ஜப்பானும் ஐரோப்பிய ஒன்றியமும் வெளியிட்ட கருத்துகளை சீனா மறுத்துள்ளது.

தைவான் நீரிணையில் தூண்டிவிடும் நோக்குடனான நடவடிக்கைகளில் ஜப்பான் ஈடுபடுவதாகவும் அதன் ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த தோக்கியோ திட்டமிடுவதாகவும் திங்கட்கிழமை (ஏப்ரல் 27) அச்சந்திப்பில் சீனா குற்றஞ்சாட்டியது.

கடல்துறைப் பாதுகாப்பு தொடர்பில் நடந்த சந்திப்பில், ஜப்பானின் இணை வெளியுறவு அமைச்சரான அயானோ குனிமித்சு, கிழக்கு சீன மற்றும் தென்சீனக் கடற்பகுதிகளின் நிலவரம் குறித்து ஜப்பான் மிகவும் கவலைகொண்டுள்ளதாகக் கூறினார். மேலும், வலுக்கட்டாயமாகவும் போக்குவரத்துச் சுதந்திரம் போன்றவற்றுக்கு இடையூறு ஏற்படுத்தியும் இயல்புநிலைக்குப் பங்கம் விளைவிக்கும் செயல்களை ஜப்பான் எதிர்க்கும் என்பதையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

அதேபோல் ஐக்கிய நாட்டு நிறுவனத்தில், ஐரோப்பிய ஒன்றியக் குழுத் தலைவரான ஸ்டாவ்ரோஸ் லாம்பிரினிடிசும் தென்சீனக் கடலில் காணப்படும் பதற்றநிலை குறித்து கருத்துரைத்திருந்தார். அங்கு தொடரும் பதற்றம், முக்கியக் கப்பல் பயணப் பாதைக்கு இடையூறு விளைவிப்பதாகவும் விதிமுறைகளை மையமாகக்கொண்ட அனைத்துலகச் செயல்பாட்டு முறையைப் பாதிப்பதாகவும் அவர் சொன்னார்.

இருதரப்பும் சீனாவைக் குறிப்பிட்டுப் பேசவில்லை. தென்சீனக் கடலின் பெரும்பாலான பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அங்குள்ள சில பகுதிகள் எந்தத் தரப்புக்குச் சொந்தம் என்ற பூசலில் சீனாவும் ஜப்பானும் ஈடுபட்டு வருகின்றன.

ஜப்பானின் கருத்துகள் தேவையற்றவை என்றும் அவை தெளிவாக இருக்கும் நிலைமையைக் குழப்புபவை என்றும் ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான சீனத் தூதர் சுன் லெய் சாடினார். அதோடு, தென்சீனக் கடல் விவகாரத்தில் ஆதாரமற்ற, பொறுப்பட்ட கருத்துகளை வெளியிடுவதை ஐரோப்பிய ஒன்றியம் தவிர்க்கவேண்டும் என்றும் அவர் சொன்னார்.

தைவான் தொடர்பில் ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி சென்ற ஆண்டு வெளியிட்ட கருத்துகள் தவறானவை என்றும் திரு சுன் கண்டனம் தெரிவித்தார். அக்கருத்துகளால் சீனா-ஜப்பான் உறவுக்குப் பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தைவான்மீது சீனா ஒருவேளை தாக்குதல் நடத்தினால் ஜப்பான் ராணுவ ரீதியாகப் பதிலடி தரக்கூடும் என்று திருவாட்டி தக்காய்ச்சி சென்ற ஆண்டு நவம்பர் மாதம் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்