சோல்: மலிவுக் கட்டணத்தில் விமானச் சேவைகளை வழங்கும் விமான நிறுவனங்கள் தென் கிழக்காசியாவில் போட்டி அதிகமாக இருந்தாலும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன.
அண்மையில் ஜெட்ஸ்டார் ஏஷியா அதன் சிங்கப்பூர் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்தது. ஆஸ்திரேலியாவின் குவான்டாஸ் நிறுவனத்திற்குக் கீழ் செயல்படும் ஜெட்ஸ்டார் ஏஷியா திடீரென அதன் சேவையை நிறுத்தியது பலரையும் வியப்பில் தள்ளியது.
இந்நிலையில், உயர்ந்து வரும் செயல்பாட்டுச் செலவுகள் லாபத்தைக் குறைத்தாலும் விமான நிறுவனங்கள் தங்களது சேவையை விரிவாக்குவதற்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றன.
கடந்த இருபது ஆண்டுகளாக ஆசியாவில் மலிவுக் கட்டணத்தில் விமானச் சேவைகளை வழங்கும் விமான நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதன் சேவைகளை அதிகரித்தன.
அதற்கு முக்கிய காரணமாக இருந்தது சீனாவிலிருந்து வரும் சுற்றுப் பயணிகள். அவர்கள் பயணங்களை அதிகமாக மேற்கொண்டதால் விமான நிறுவனங்கள் லாபத்தை எளிதாகப் பெற்றன.
ஆசியாவில் அடுத்த பல ஆண்டுகளுக்கு விமானச் சேவைகளுக்கான தேவை தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் வியட்னாமின் வியட்ஜெட், மலேசியாவின் ஏர் ஏஷியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் புதிதாக விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய வட்டாரத்துடன் ஒப்பிடுகையில் மற்ற வட்டாரங்களில் லாபம் சற்று குறைவதுதான் என்பதால் விமான நிறுவனங்கள் ஆசிய-பசிபிக் வட்டாரத்துக்கு முன்னுரிமை வழங்குகின்றன.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் செயல்படும் விமான நிறுவனங்களின் மொத்த நிகர லாபம் 1.9 விழுக்காடாக இருக்கும் என்று அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 காலகட்டத்திற்குப் பிறகு தற்போது ஆசியாவில் செயல்படும் பெரும்பாலான விமான நிறுவனங்கள் முழுவீச்சில் செயல்படுகின்றன.
பல நாள்கள் விமானங்களில் இருக்கைகள் விற்றுத் தீர்ந்துள்ளன. போட்டி கடுமையாக இருப்பதால் விமான இருக்கைகள் விலையும் குறைக்கப்படுகின்றன.
அதேபோல் அனைத்துலக விமான நிறுவனங்கள் ஆசியாவில் விலையைக் குறைத்துள்ளன. 2023ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 12 விழுக்காடு விலை குறைக்கப்பட்டுள்ளது.
ஆசியப் பயணிகள் மலிவுக் கட்டணத்தில் பயணம் செய்ய விரும்புவார்கள் என்பதால் சேவைகளுக்கான தேவை அதிகமாக இருக்கும். அதனால் விமான நிறுவனங்கள் விமானத்தில் அதிக இருக்கைகளை ஏற்படுத்தி எரிபொருள் மிச்சம் செய்து லாபத்துடன் செயல்படுவார்கள் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.