தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விசா இல்லாமல் சீனச் சுற்றுப்பயணக் குழுக்களை அனுமதிக்கும் தென்கொரியா

1 mins read
2d0e8ec0-4c42-4275-837b-544f5dfbc9d4
முன்னோடித் திட்டத்தின் ஓர் அங்கமாக, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சீனச் சுற்றுப்பயணிகளைக் கொண்ட குழுக்கள், விசா இல்லாமல் தென்கொரியாவில் 15 நாள்களுக்குத் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: தென்கொரியா, விசா இன்றி சீனச் சுற்றுப்பயணக் குழுக்களை அனுமதிக்கும் நடைமுறையைத் திங்கட்கிழமை (செப்டம்பர் 29) தொடங்கியுள்ளது.

நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கும் சீனாவுடனான உறவுகளை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை உதவும் என்று அது கருதுகிறது.

இந்த முன்னோடித் திட்டம் 2026ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதிவரை நடப்பிலிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் ஓர் அங்கமாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சீனச் சுற்றுப்பயணிகளைக் கொண்ட குழுக்கள், விசா இல்லாமல் 15 நாள்கள் வரை தென்கொரியாவில் தங்கியிருக்க அனுமதி உண்டு.

அக்டோபர் 1 முதல் 8ஆம் தேதி வரை சீனாவில் தேசிய தின விடுமுறைக் காலம். தென்கொரியாவிலும் கிட்டத்தட்ட அதேவேளையில் விடுமுறைக் காலமாகும். அதற்கு முன்னதாகத் தென்கொரியா இந்தச் சிறப்புத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

சுற்றுலாத் துறை சார்ந்த தென்கொரிய நிறுவனங்கள் இந்த நடவடிக்கையால் நன்மை விளையும் என்று எதிர்பார்க்கின்றன.

சில நிறுவனங்கள் சீனர்களுக்கான சிறப்புப் படகுச் சவாரிகளுக்கு ஏற்பாடு செய்யும் வேளையில், உணவு விநியோகச் செயலிகளில் அலிப்பே, வீசேட் பே போன்ற சீன மின்னிலக்கக் கட்டணம் செலுத்தும் முறைகளுக்கான தெரிவுகள் இணைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, 2024 நவம்பரில் தென்கொரியர்கள் 30 நாள்கள்வரை விசா இல்லாமல் சீனாவில் தங்கியிருக்கலாம் என்று பெய்ஜிங் அறிவித்ததைத் தொடர்ந்து சோலும் அதேபோன்ற திட்டத்தை இவ்வாண்டு மார்ச்சில் அறிவித்தது.

குறிப்புச் சொற்கள்