தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பின்விளைவுகளை உடனடியாக சரிசெய்ய தென்கொரியா, அமெரிக்கா இணக்கம்

1 mins read
தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் நாடுகளின் பட்டியலில் தென்கொரியா
f7c51ab7-058a-46f3-8292-b49991d46fc2
வாஷிங்டனுக்கு அருகே Dulles அனைத்துலக விமான நிலையத்தில் வியாழக்கிழமை (மார்ச் 20) செய்தியாளர்களிடம் பேசும் தென்கொரிய தொழில்துறை அமைச்சர் ஆன் டுக்-கியுன். - படம்: இபிஏ

சோல்: தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் நாடாக தென்கொரியாவை அமெரிக்க எரிசக்தித்துறை அமைச்சு வகைப்படுத்தியதால் ஏற்பட்டுள்ள பின்விளைவுகளை உடனடியாக சரிசெய்வதற்கு இணைந்து பணியாற்ற தென்கொரியாவும் அமெரிக்காவும் இணக்கம் தெரிவித்துள்ளன.

சீனா, ஈரான், ரஷ்யா, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள கண்காணிப்புப் பட்டியலில் ஆசிய நட்பு நாடான தென்கொரியாவை வைத்துள்ளதற்கான காரணத்தை அமெரிக்க எரிசக்தித் துறை விவரிக்கவில்லை. ஜனவரியிலேயே அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கை குறித்து அண்மையில்தான் அறிந்ததற்காக தென்கொரிய அரசாங்கம் விமர்சனங்களை எதிர்நோக்குகிறது.

தென்கொரிய தொழில்துறை அமைச்சர் ஆன் டுக்-கியுன், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்குச் சென்றுள்ளார். பல நாடுகளின் ஏற்றுமதிகள்மீது வரிவிதிக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளதற்கு கவலை எழுந்துள்ளது.

“கண்காணிப்புப் பட்டியலில் தென்கொரியா சேர்க்கப்பட்டுள்ளது குறித்து எங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளோம். அதன் அடிப்படையில் இந்த விவகாரத்துக்கு உடனடியாக தீர்வுகாண்பதில் ஒத்துழைக்க தென்கொரியாவும் அமெரிக்காவும் இணக்கம் கண்டன,” என்று தொழில்துறை அமைச்சு கூறியது.

இதுகுறித்த கண்ணோட்டத்தை வெளிப்படுத்த அமெரிக்க எரிசக்தித்துறை அமைச்சர் கிறிஸ் ரைட்டை திரு ஆன் வியாழக்கிழமை (மார்ச் 20) சந்தித்தார். எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இருவர் கலந்தாலோசித்ததாக தென்கொரியத் தொழில்துறை அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.

இதற்கிடையே, இருநாடுகளுக்கும் இடையே இருதரப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பில் கட்டுப்பாடுகள் இல்லை என அமெரிக்க எரிசக்தித்துறை அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்