தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கொரியா: யூன் கைதுக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் வலுக்கும் ஆர்ப்பாட்டங்கள்

2 mins read
a95ac2f8-3566-423f-86d5-a28771d05cb9
தென்கொரியாவில் அரசியல் குற்றம் சுமத்தப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சுக் இயோலின் ஆதரவாளர்கள் ஜனவரி 5ஆம் தேதி கொட்டும் பனியிலும் அவரது இல்லத்துக்கு அருகே நடந்த பேரணியில் கலந்துகொண்டனர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3

சோல்: தென்கொரியத் தலைநகர் சோலில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கானோர் பேரணிகளில் கலந்துகொண்டுள்ளனர்.

அரசியல் குற்றம் சாட்டப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அதிபர் யூன் சுக் இயோலைக் கைது செய்வதற்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் இருவேறு பேரணிகள் அவரது அதிகாரபூர்வ இல்லத்துக்கு அருகே நடைபெற்றன.

அரசாங்கத்துக்கு எதிரான திட்டமிட்ட கிளர்ச்சியில் ஈடுபட்டதாகக் கூறி திரு யூனுக்குப் பிறப்பிக்கப்பட்ட கைதாணை ஜனவரி 6ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு காலாவதியாகிவிடும்.

இந்நிலையில் அவரை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவரது ஆதரவாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேரணி நடத்தினர்.

திரு யூன், கடந்த டிசம்பர் 3ஆம் தேதி, ராணுவ ஆட்சிச் சட்டத்தை அமல்படுத்த மேற்கொண்ட முயற்சி தோல்வியுற்றது. இதனால் தென்கொரியாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டில் பதவியில் உள்ளபோதே கைது நடவடிக்கையை எதிர்கொள்ளும் முதல் அதிபராக அறியப்படுகிறார் திரு யூன்.

ராணுவ ஆட்சிச் சட்டத்தை அவர் அறிவித்ததன் தொடர்பில் நாடாளுமன்றம் திரு யூன் மீது அரசியல் குற்றம்சாட்டி அவரை இடைநீக்கம் செய்தது.

அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவதா பதவிநீக்கம் செய்வதா என்பதன் தொடர்பில் நீதிமன்றம்தான் தீர்ப்பளிக்கும் எனக் கூறப்பட்டது.

ஜனவரி 3ஆம் தேதி திரு யூனைக் கைது செய்ய முயன்ற குற்றவியல் விசாரணையாளர்கள், அதிபர் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஜனவரி 5ஆம் தேதி சோலில் உறைநிலைக்குக்கீழ் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியதால் நகரின் சில பகுதிகளில் 5 சென்டிமீட்டருக்குமேல் பனிப்பொழிவு பதிவானது.

அதைப் பொருட்படுத்தாது திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களில் கொரியத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் அடங்குவர். அரசியலமைப்புச் சட்டத்தை நிராகரித்த அதிபரைத் தண்டிப்பதன் மூலம் சமூகத்தின் அடித்தளத்தை மீண்டும் நிறுவவேண்டியது அவசியம் என்று அக்கூட்டமைப்பின் தலைவர் யாங் கியுங்-சூ கூறினார்.

அவர்களுக்கு அருகிலேயே திரு யூனின் ஆதரவாளர்களும் திரண்டிருந்தனர். ‘அதிபர் யூன் சுக் இயோலுக்காகப் போராடுவோம்’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுடன் 2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வியுற்றபோது தேர்தல் மோசடி நடந்ததாகக் கூறி திரு டோனல்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அதிகம் பயன்படுத்திய திருட்டைக் கைவிடவும் எனும் பொருள்படும் வாசகம் (Stop the Steal) அடங்கிய பதாகைகளும் காணப்பட்டன.

குறிப்புச் சொற்கள்