சோல்: தென்கொரியாவில் தொழில்துறைக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவத்தில், இடிபாடுகளில் சிக்கிய ஊழியர்களை மீட்கும் பொருட்டு மீட்புக் குழுவினர் அருகில் இருந்த உயரமான கோபுரங்கள் இரண்டை வெடிவைத்துத் தகர்த்ததாகக் கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11), தென்கொரிய மீட்புக் குழுவினர் இவ்வாறு நடவடிக்கை மேற்கொண்டனர்.
இடிந்து விழுந்த அந்தக் கட்டடத்தில், மாண்டுவிட்டதாகக் கருதப்படும் ஊழியர் இருவர் சிக்கியுள்ள நிலையில் மேலும் இருவரைக் காணவில்லை.
மிகப் பெரிய எஃகுக் கட்டமைப்பு ஒன்றில் வேலைபார்த்துக் கொண்டிருந்த ஒன்பது பேரில் அவர்களும் அடங்குவர். உஸ்லான் நகர மின்நிலையத்தில் செயல்பாடுகள் நிறுத்தப்பட்ட வெப்பமூட்டும் வளாகத்தில் அது அமைந்துள்ளது.
அந்தக் கட்டடத்தை இடிப்பதற்குத் தயார்ப்படுத்தும் வகையில் ஐந்து நாள்களுக்குமுன் அதன் அடித்தளத்தை வலுவிழக்கச் செய்யும் பணியை அவர்கள் மேற்கொண்டிருந்தபோது, கட்டடம் இடிந்து விழுந்தது.
சம்பவத்தை அடுத்து ஊழியர்கள் இருவர் விரைவாக மீட்கப்பட்டனர். ஆயினும், மேலும் எழுவர் கட்டட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
அந்தப் பகுதி மேலும் இடிந்து சிதையும் அபாயம் இருந்ததால் மீட்புப் பணிகளுக்கு இடையூறாக விளங்கியது. மூவரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், இடிந்த கட்டடப் பகுதிக்கு அருகே இருந்த 60 மீட்டர் உயரக் கோபுரங்கள் இரண்டு, வலுவற்ற நிலையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டது. மீட்புப் பணி அதனால் மெதுவடையும் என்று கூறப்பட்டது.
எனவே, அவ்விரு கோபுரங்களும் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
மீட்புப் பணிகள் நிறைவடைந்ததும் கட்டடம் இடிந்து விழுந்ததன் தொடர்பில் குற்றவியல் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தென்கொரியத் தொழிலாளர் துறை அமைச்சர் கிம் யங்-ஹூனை மேற்கோள்காட்டித் தென்கொரிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

