சோல்: தென்கொரிய ஆகாயப் படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று கியோங்கி மாநிலத்தில் உள்ள கிராமம் மீது தவறுதலாக குண்டு மழை பொழிந்தது.
குண்டுகள் வெடித்ததில் அக்கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
காயமடைந்தோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குண்டுகள் வெடித்ததில் பல கட்டடங்கள் சேதமடைந்தன.
உண்மையான ஆயுதங்கள், தோட்டாக்கள் , குண்டுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தென்கொரிய ஆகாயப் படை போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் வியாழக்கிழமை (மார்ச் 6) நிகழ்ந்ததாக தென்கொரிய அதிகாரிகள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
கேஎஃப்-16 ரக போர் விமானம் ஒன்று தவறுதலாகக் குண்டு போட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மொத்தம் எட்டு குண்டுகள் கிராமம் மீது விழுந்ததாக அதிகாரிகள் கூறினர்.
கிராமவாசிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதற்காகத் தென்கொரிய ஆகாயப் படை மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டிக்கொள்வதாக அது கூறியது.
தங்கள் கிராமத்துக்கு மிக அருகில் உண்மையான ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்படும் போர்ப் பயிற்சிகளால் ஆபத்து ஏற்படும் சாத்தியம் அதிகம் இருப்பதாக அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக எதிர்ப்பு குரல் எழுப்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.