சோல்: வடகொரியாவின் அடுத்தடுத்த தூண்டுதல் நடவடிக்கைகளுக்கு கடுமையான பதிலடி காத்திருக்கிறது என்றும் பதற்றத்தை அதிகரிக்க தென்கொரியாமீது வடகொரியா குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தென்கொரிய ராணுவம் எச்சரித்துள்ளது.
1953ஆம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இரு கொரியாக்களையும் பிரிக்கும் எல்லைப் பகுதியான படைவிலக்க மண்டலத்தில் கடந்த செப்டம்பர் மாதம் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதில் மூன்று ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். அந்தச் சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று வடகொரியா மறுத்திருந்தது.
ஆனால், தென்கொரிய எல்லைப் பகுதிக்குள் வடகொரியா வைத்த கண்ணிவெடிகளாலேயே வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது என தென்கொரியாவும் ஐநா சபையின் கூட்டுக்குழுவும் நடத்திய விசாரணை முடிவில் தெரியவந்தது.
எனவே, அந்தச் சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தென்கொரியா விடுத்த நிபந்தனையை வடகொரியா ஏற்க மறுத்தது.
தென்கொரியாவுடனான எல்லைப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகவும் அப்பகுதியில் மேலும் சில குறிப்பிடப்படாத தாக்குதல் சாதனங்களைக் குவிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் வடகொரியா திங்கட்கிழமை (அக்டோபர் 19) தெரிவித்தது.
மேலும், தென்கொரியா அக்டோபர் 1 முதல் 17 வரை 998 முறை ஒலிபெருக்கி மூலம் தூண்டுதல் அறிவிப்புகளைச் செய்ததாகவும் 91 எச்சரிக்கை துப்பாக்கிச்சூடுகளை நடத்தியதாகவும் வடகொரியா குற்றம் சாட்டியது.
இந்தக் குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனக் கூறிய தென்கொரியா, ராணுவப் பதற்றத்தை அதிகரிப்பதற்கான பழியை எவ்வித ஆதாரமுமின்றி எங்கள்மீது வடகொரியா சுமத்துகிறது என்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
