சோல்: தென்கொரியாவில் மூன்றாவது நாளாகப் பேய்மழை கொட்டித் தீர்த்ததால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது; அணை ஒன்று நிரம்பி வழிந்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதுவரை 22 பேர் உயிரிழந்துவிட்டனர் என்றும் 14 பேரைக் காணவில்லை என்றும் எழுவர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் நேரப்படி சனிக்கிழமை காலை 11 மணியளவில், 1,567 பேர் தங்களது வசிப்பிடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தென்கொரிய உள்துறை, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
வடக்கு சூங்சங் மாநிலத்திலுள்ள ஓர் அணை நிரம்பி வழிவதால் தங்களது வீடுகளைவிட்டு வெளியேற்றப்படுவோரின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை தங்களது வீடுகளைவிட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களை நாடும்படி 7,000க்கும் மேற்பட்டோர்க்கு உள்ளூர் அரசாங்கங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன.
காலை 9 மணி நிலவரப்படி, கோசன் அணையிலிருந்து அதன் அதிபட்ச அளவான நொடிக்கு 2,700 கனஅடி என்ற அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனிடையே, மெதுவாக இயங்கும் அனைத்து ரயில்களையும் அதிவிரைவு ரயில்கள் சிலவற்றையும் நிறுத்திவைப்பதாகவும் கொரிய ரயில் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலச்சரிவு, நீரில் மூழ்கியுள்ள தண்டவாளங்கள், பாறைகள் பெயர்ந்து விழுவது போன்ற காரணங்களால் பாதுகாப்பு கருதி மற்ற அதிவிரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
வடக்கு சூங்சங் மாநிலத்தில் நிலச்சரிவால் தண்டவாளத்தில் மண் குவிந்ததால் வெள்ளிக்கிழமை பிற்பகலில் ரயில் ஒன்று தடம்புரண்டதாகப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
இந்நிலையில், தென்கொரியப் பிரதமர் ஹன் டக் சூ இன்று சனிக்கிழமை காலை அரசாங்க அமைப்புகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, மீட்புப் பணிகளில் அரசாங்க அதிகாரிகளுக்கு உதவும்படி ராணுவத்தை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

