சோல்: தனது விமானப் பாதுகாப்பு அமைப்பை மீண்டும் புதிதாகக் கட்டமைக்கத் தென்கொரியா திட்டமிட்டுள்ளது. அண்மையில் இரு பெரிய விமான விபத்துக்களை அந்நாடு சந்தித்த நிலையில், விமானப் பயணத்தை மேம்படுத்த புதிய குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும் என செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) தென்கொரியப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
“நமது நாட்டின் விமானப் பாதுகாப்பு அமைப்பின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில், விமானப் பாதுகாப்பு அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் உறுதியான முயற்சியை மேற்கொள்ளும்,” என அந்தப் புதிய குழுவிடம் தென்கொரிய நிலம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து துணை அமைச்சர் பேக் வோன்-குக் கூறினார் என அந்நாட்டு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மேலும், விமானப் பாதுகாப்புக்குத் தென்கொரிய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் அவர் வலியுறுத்தினார்.
இந்தக் குழுவில் தனியார் துறை வல்லுநர்களும் இடம்பெறுவர். பராமரிப்பு, விமானப் பயன்பாட்டு விகிதங்கள் போன்றவற்றை விமான நிறுவனங்கள் எப்படி கையாளுகின்றன என்றும் விமான நிலைய கட்டுமானம், செயல்பாடு உள்ளிட்டவற்றில் இருக்கும் சிக்கல்களை இக்குழு ஆராயும் என ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் தெரிவித்தது.