சோல்: மத்திய கிழக்கிலிருந்து தனது குடிமக்களை வெளியேற்ற, உடனடியாக ராணுவ விமானங்களை அங்கு அனுப்புமாறு தென்கொரிய அதிபர் யூன் சுக் யொல் உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான சண்டையால் பதற்றநிலை அதிகரித்து வருவதே அதற்குக் காரணம்.
“இஸ்ரேலிலும் மத்திய கிழக்கிலும் உள்ள தென்கொரியக் குடிமக்களைப் பாதுகாப்பதே அதிமுக்கியமானது என்பதை அதிபர் வலியுறுத்தியுள்ளார். தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்,” என்று அதிபரின் அலுவலகம் அறிக்கை ஒன்றில் கூறியது.
“குறிப்பாக, குடிமக்களை வெளியேற்ற ராணுவப் போக்குவரத்து விமானங்கள் உடனடியாக அனுப்பப்பட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
“மத்திய கிழக்கில் மீண்டும் நிலைத்தன்மையைக் கொண்டுவர, அனைத்துலக சமூகத்துடன் அணுக்கமான ஒத்துழைப்புக்கான தேவையை அவர் வலியுறுத்தினார்,” என்று அதிபர் அலுவலகம் தெரிவித்தது.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், ராணுவ விமானங்களை அனுப்புவதற்கான சோலின் முடிவு வந்துள்ளது.
அக்டோபர் 1ஆம் தேதி இஸ்ரேலுக்குள் ஈரான் 180க்கும் அதிகமான ஏவுகணைகளைப் பாய்ச்சியது. இஸ்ரேல், ஹிஸ்புல்லாவைக் குறிவைத்து லெபனானில் தரைவழித் தாக்குதலை நடத்தியது.