கியோங்ஜு: தென்கொரியா, அமெரிக்காவுடன் முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக உடன்பாட்டில் இணக்கம் கண்டுள்ளது. சில மாதங்களாக உடன்பாடு குறித்த பேச்சு முடங்கிக் கிடந்தது.
அமெரிக்கா, தென்கொரியாவுக்கு விதித்த தீர்வையைக் குறைப்பதில் இரு தரப்புக்கும் இடையில் இழுபறி நீடித்தது. அதனை 25 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காட்டுக்குக் குறைக்கவேண்டும் என்பது சோலின் விருப்பம். அதற்குக் கைம்மாறாகத் தென்கொரியா, அமெரிக்காவில் 350 பில்லியன் அமெரிக்க டாலர் (453 பில்லியன் வெள்ளி) முதலிடவேண்டும் என்பதில் கருத்திணக்கம் ஏற்படாமல் இருந்தது.
திரு டிரம்ப், இதற்கு முன்னர் 350 பில்லியன் டாலர் முதலீட்டையும் ரொக்கமாகக் கொடுக்கவேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால் அவ்வாறு செய்தால் அது தனது நிதியிருப்பைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் நிதி நெருக்கடியின் விளிம்புக்குத் தள்ளக்கூடும் என்றும் தென்கொரியா மீண்டும் மீண்டும் கூறிவந்தது.
வர்த்தக உடன்பாட்டில் இப்போது இணக்கம் காணப்பட்டுள்ளது. அதன்படி, தென்கொரியா அமெரிக்காவில் 200 பில்லியன் டாலர் ரொக்கமாக முதலீடு செய்யும். அதில் ஆண்டு வரம்பாக 20 பில்லியன் டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 150 பில்லியன் டாலர், தத்தளிக்கும் அமெரிக்கக் கப்பல் கட்டுமானத் துறைக்குப் புத்துயிரூட்டப் பயன்படுத்தப்படும்.
உடன்பாடு ஏறக்குறைய கைகூடிவிட்டதாகப் பறைசாற்றினார் அதிபர் டிரம்ப். விருந்து நிகழ்ச்சியில் திரு டிரம்ப் பேசினார். சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங் உட்பட உலகத் தலைவர்கள் பலர் அதில் கலந்துகொண்டனர். ஏபெக் மாநாட்டிற்காகத் தலைவர்கள் அங்குக் கூடியுள்ளனர்.
அமெரிக்க அதிபருக்குத் தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங் நாட்டின் ஆக உயரிய ‘தி கிராண்ட் ஆர்டர் ஆஃப் முகுங்வா’ விருதை புதன்கிழமை (அக்டோபர் 29) வழங்கிச் சிறப்பித்தார். பண்டைய சில்லா அரசின் தங்க மகுடத்தின் நகலையும் திரு டிரம்ப்புக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார் திரு லீ.
கொரியத் தீபகற்பத்தின் அணுவாயுதப் பிரச்சினையைக் களைவதற்குத் திரு டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளுக்காக அவருக்கு ‘அமைதிக்காவலர்’ என்ற புகழாரத்தையும் சூட்டினார் தென்கொரிய அதிபர்.


