தென்கொரியா: யூன் விசாரணைக்கு வரவில்லை

1 mins read
கைது செய்யப்படும் வாய்ப்பு அதிகரிப்பு
5e982fe4-d02b-45ff-af3a-6a5bb5359e17
தென்கொரிய அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட யூன் சுக் இயோல். - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: தென்கொரியாவில் அரசியல் கண்டனத்துக்கு ஆளான முன்னைய அதிபர் யூன் சுக் இயோல், டிசம்பர் 18ஆம் தேதி கூட்டு விசாரணைக் குழுவின் விசாரணைக்கு முன்னிலையாகவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவர் கைது செய்யப்படும் வாய்ப்பை இது அதிகரித்திருப்பதை அவை சுட்டின.

தென்கொரிய நேரப்படி காலை 10 மணிக்கு (சிங்கப்பூரில் காலை 9 மணி) கூட்டு விசாரணைக் குழு திரு யூனை விசாரிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

தென்கொரியத் தற்காப்பு அமைச்சு, காவல்துறை, ஊழல் ஒழிப்பு விசாரணைப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்தோர் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

திரு யூன் விசாரணைக்கு வராததால் இரண்டாம் முறை அவருக்கு அழைப்பாணை அனுப்ப விசாரணையாளர்கள் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் கூறின.

தென்கொரிய நாடாளுமன்றத்தில் டிசம்பர் 14ஆம் தேதி அவருக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அதிபர் பதவியிலிருந்து திரு யூன் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இம்மாதத் தொடக்கத்தில் அவர் திடீரென்று ராணுவ ஆட்சிச் சட்டம் அமலுக்கு வரும் என்று அறிவித்ததால் தென்கொரியாவில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டது.

அவர் தேசத் துரோகக் குற்றம் இழைத்ததாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். இதன் தொடர்பில் விசாரணையளர்கள் அவரிடம் விசாரணை நடத்தக் கோருகின்றனர்.

தனிப்பட்ட முறையில், அரசாங்க வழக்கறிஞர் குழுவும் திரு யூன் டிசம்பர் 21ஆம் தேதிக்குள் விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்