சோல்: தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் கடந்த புதன்கிழமை (ஜனவரி 15) கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது மனைவி திருவாட்டி கிம் கியோன் ஹீ உடல்நலக் குறைவால் அவதிப்படுவதாக ஊடகத் தகவல் ஒன்று தெரிவித்து உள்ளது.
தலைநகர் சோலில் உள்ள ஹன்னாம்-டோங் அதிபர் மாளிகையில் திருவாட்டி கிம் தனிமையில் வாடுவதாகவும் வியாழக்கிழமை (ஜனவரி 17) வெளியான அந்தத் தகவல் குறிப்பிட்டது.
அதிபர் மாளிகையில் தலைமகளைச் சந்தித்த அதிகாரிகள் அவர் மிகவும் வருத்தத்துடன் இருப்பதாகவும் உடல்மெலிந்துவிட்டதாகவும் தெரிவித்தனர் என்றது அந்தத் தகவல்.
குறிப்பாக, தென்கொரியாவில் அதிபர் யூன் ராணுவச் சட்டத்தை அறிவித்த டிசம்பர் 3ஆம் தேதி முதல் திருவாட்டி கிம் சரிவர சாப்பிடுவதில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர்.
திரு யூன் கைது செய்யப்பட்டபோது அதிபர் மாளிகையில் இருந்த ஆளும் மக்கள் சக்திக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் திருவாட்டி கிம்மின் உடல்நிலை பற்றி தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
“சரியாகச் சாப்பிடாததால் மருத்துவமனைக்குச் செல்லும் நிலையில் அவரது உடல்நிலை காணப்பட்டது. இருப்பினும், மருந்துகளைச் சாப்பிட்டு அவர் சமாளித்துக்கொள்கிறார்,” என்று ஊடகத்திடம் அவர்கள் கூறினர்.
தமக்கு எதிராக ஆடம்பர கைப்பை ஊழல் குற்றச்சாட்டு, டாய்ச் மோட்டார்ஸ் நிறுவன பங்குகளில் மோசடி செய்த குற்றச்சாட்டு ஆகியன 2024 ஜூலையில் சுமத்தப்பட்ட பிறகு திருவாட்டி கிம் பொதுமக்களின் பார்வையில் படவில்லை.
மேலும், 2024 நவம்பரில் அதிபர் யூன் மத்திய, தென் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தபோது அவருடன் திருவாட்டி கிம் காணப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், தலைமகள் என்ற முறையில் அரசாங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அவர் பல மாதங்களாகத் தவிர்ந்து வந்துள்ளார்.
இதற்கிடையே, திருவாட்டி கிம்முக்கு எதிரான ஊழல் விசாரணையைத் தொடங்குமாறு எதிர்த்தரப்பு கொரிய ஜனநாயகக் கட்சி வலியுறுத்தி உள்ளது.