சோல்: குறை மாதக் கர்ப்பிணி ஒருவர் தென்கொரிய மருத்துவமனைகளின் உதவியை நாடியபோது, அவரை ஏற்றுக்கொள்ள அவை மறுத்ததால் அவரின் சிசு இறக்க நேரிட்டது.
அந்தத் துயரச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (மே 1) நடந்தது.
அவருக்கு ரத்தக் கசிவு ஏற்பட்டதால் ஆரம்பத்தில் அந்த மாது மத்திய தென்கொரியாவின் ‘சியொங்ஜூ’ நகரில் உள்ள மகப்பேறு மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவசரப் பிரசவ உதவி தேவைப்பட்டதால் அந்த மருத்துவமனையின் அதிகாரிகள் அந்த வட்டாரத்தில் இருந்த ஆறு மருத்துவமனைகளிடம் அவரைச் சேர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர்.
அவர் ஏழு மாதங்களைக் கடந்த 29 வாரங்களே ஆன சிசுவை சுமந்திருந்ததால், அந்த மருத்துவமனைகள் பல காரணங்களைக் கூறி அவரை மறுத்தனர். முக்கியமாக, அவருக்குப் பிரசவம் பார்க்கும் நிபுணர்கள் பணியில் இல்லை என்று குறிப்பிட்டு அவரை நிராகரித்தனர்.
பிறகு, அவசர உதவி நாடி, மகப்பேறு மருத்துவமனை தீயணைப்பு அதிகாரிகளை அழைத்தது. அவரை 280 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புசான் நகரில் இயங்கும் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் வழியாகத் தீயணைப்புத் துறையினர் அழைத்துச் சென்றனர்.
மூன்றரை மணி நேரம் நீடித்த பயணத்தில் அவர் மருத்துவமனையை அடையும் முன்பாக அந்த சிசு உயிரிழந்துவிட்டது. அந்த மாதின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் நேரவில்லை.
தென்கொரியாவில் மருத்துவமனைகளின் அனுமதியின்றி, நோயாளிகளை அவசர மருத்துவ வாகனங்கள் எங்கும் அழைத்துச் செல்ல முடியாது. அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டு நோயாளிகளுக்கு ஏதெனும் தீங்கு நேர்ந்தால், சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
மருத்துவர்களுக்கு இந்த நிலை உள்ளதாலும் மருத்துவ சேவைப் பணியார்களின் தட்டுப்பாட்டாலும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் மறுப்பது அங்கு வழக்கமாகிவிட்டது.

