சோல்: தென்கொரியாவின் காவல்துறையில் மொழிபெயர்ப்புச் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
காவல்துறைக்கு வரும் அவசர அழைப்புகள் முதல் கைது நடவடிக்கைகள், விசாரணைகள் வரை பன்மொழி ஆதரவில் உள்ள குறைபாடுகள் வெளிச்சத்திற்கு வந்திருப்பது அதைக் காட்டுகிறது.
காவல்துறை தந்த தரவுகளின்படி, 112 எனும் அவசர உதவி எண்ணிற்கு வந்த வெளிநாட்டு மொழி அழைப்புகளின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் 21,252ஐ எட்டியது; இது 2024ல் பதிவான 10,348 அழைப்புகளைக் காட்டிலும் ஒரு மடங்குக்கும் அதிகம்.
நடப்பாண்டின் முதல் எட்டு மாதங்களிலேயே 21,012 அழைப்புகள் பதிவாகியுள்ளன.
தற்போது ஆங்கிலம், சீன மொழிகளுக்கு மட்டுமே நேரடி உரைபெயர்ப்பு வசதி உள்ளது. மற்ற மொழி அழைப்புகளுக்கு வெளி உரைபெயர்ப்பு அமைப்புகளையே காவல்துறை சார்ந்திருக்கிறது.
காவல் நிலையங்களில் நேரில் நடத்தப்படும் விசாரணைகளுக்குப் பகுதிநேர உரைபெயர்ப்பாளர்களே அழைக்கப்படுகின்றனர்.
பொதுவாக இந்த மொழிபெயர்ப்பாளர்கள் வேறு வேலைகளில் இருப்பவர்கள்; காவல்துறையின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்கள் விசாரணை அமர்வுகளில் கலந்துகொள்கின்றனர்.
சோல் பெருநகரக் காவல்துறையில் செப்டம்பர் நிலவரப்படி 629 உரைபெயர்ப்பாளர்கள் உள்ளனர். அவர்களுள் சீன மொழிக்கு 198 பேரும் ஆங்கிலத்திற்கு 97 பேரும் வியட்னாமிய மொழிக்கு 64 பேரும் இருக்கின்றனர்.
குறிப்பாக, கைது செய்யப்படும் வெளிநாட்டினருக்குக் கைதுக்கான காரணத்தையும் வழக்கறிஞரை நாடும் உரிமையையும் விளக்குவதில் பெருஞ்சவால்கள் நிலவுகின்றன.
அத்தகைய நேரங்களில் உடனடியாக உரைபெயர்ப்பாளர்களை அமர்த்துவது கடினமாக உள்ளது. இதனால் கியோங்கி காவல்துறை போன்ற சில பிரிவுகள் கைப்பேசிச் செயலிகள் மூலம் ஒலி, எழுத்து வடிவில் எச்சரிக்கைகளை வழங்கி வருகின்றன.
கைது செய்யப்படும் இடங்களில் உள்ள குறைபாடுகள்
பிரச்சினைக்குத் தீர்வாக, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உரையாடல்களை உடனுக்குடன் மொழிபெயர்க்கும் புதிய முறையைக் காவல்துறை உருவாக்கி வருகிறது.
ஆங்கிலம், சீனம், ஜப்பான், தாய்லாந்து, வியட்னாமிய மொழிகளை ஆதரிக்கும் இத்திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக மூன்று ஆண்டுகளில் 45.6 பில்லியன் வோன் ($43.83 மில்லியன்) நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
புதிய கட்டமைப்பு தயாராகும் வரை தற்போதைய முறையே தொடரும் என்றும் தவறான மொழிபெயர்ப்புச் சிக்கல்களைத் தவிர்க்கக் களத்தில் மனிதர்கள் சரிபார்ப்பதே சிறந்தது என்றும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
