சோல்: தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மீது அரசியல் குற்றச்சாட்டு கொண்டுவருவதற்கான மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (டிசம்பர் 4) தாக்கல் செய்துள்ளனர்.
அதிபர் யூன் டிசம்பர் 3ஆம் தேதி ராணுவ ஆட்சிச் சட்டத்தை அறிவித்தார். சில மணிநேரம் கழித்து அதை மீட்டுக்கொண்டார். இதனால் தென்கொரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.
திரு யூன் அரசியல் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்து, ஊடகத் தணிக்கைக்கு மேற்கொண்ட முயற்சியை நாடாளுமன்றம் நிராகரித்தது.
தலைநகர் சோலில் அமைந்துள்ள தென்கொரிய நாடாளுமன்றத்துக்குள் ஆயுதப் படையினர் நுழைந்தனர்.
முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி, அதிபர் யூன் பதவி விலகவேண்டும் அல்லது அரசியல் குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது.
அதையடுத்து ஆறு எதிர்க்கட்சிகள் இணைந்து, அதிபர் யூன் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தக் கோரும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தன. இதன் மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 அல்லது 6ஆம் தேதி நடைபெறும்.
சட்டவிரோதமான ராணுவ ஆட்சிச் சட்ட அமலாக்கத்தைப் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது. ஜனநாயகம் வீழ்ச்சியடைவதை இனியும் அனுமதிக்க முடியாது என்று ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கிம் யோங் மின் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆளும் மக்கள் சக்திக் கட்சியில் இதன் தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. தற்காப்பு அமைச்சர் கிம் யோங் ஹியுனைப் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றும் அமைச்சரவை ஒட்டுமொத்தமாகப் பதவி விலகவேண்டும் என்றும் கட்சித் தலைவர் வலியுறுத்துகிறார்.
தொடர்புடைய செய்திகள்
அமைச்சர் கிம் பதவி விலக முன்வந்திருப்பதாகத் தற்காப்பு அமைச்சு கூறுகிறது.
நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், அணுவாயுதங்களை வைத்திருக்கும் வடகொரியா, அதை ஆதரிக்கும் அரசாங்க எதிர்ப்புச் சக்திகள் ஆகியவற்றிடமிருந்து தென்கொரியாவைத் தற்காக்க ராணுவ ஆட்சிச் சட்டம் அவசியம் என்று திரு யூன் கூறியிருந்தார். நாட்டின் அரசியலமைப்பு ஒழுங்குமுறையைப் பாதுகாக்கவும் அது முக்கியம் என்று கூறிய அவர் எந்த அச்சுறுத்தலையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
இந்த அரசியல் பிரச்சினை குறித்து வடகொரியா ஏதும் கருத்துரைக்கவில்லை.
டிசம்பர் 3ஆம் தேதி இரவு தொடங்கி அதிகாலை வரை நடந்த இந்த நடவடிக்கைகளின் சுவடு இல்லாமல் டிசம்பர் 4ஆம் தேதி காலை, தென்கொரியாவில் ரயில்களிலும் சாலைகளிலும் போக்குவரத்து வழக்கம்போல் காணப்பட்டது.
இருப்பினும், சோலில் பேரணி நடத்த கொரிய வர்த்தகத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு திட்டமிடுகிறது. அதிபர் பதவியில் இருந்து விலகும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று அது சூளுரைத்துள்ளது.
அதிபர் யூன் பதவி விலகினாலோ பதவி நீக்கம் செய்யப்பட்டாலோ பிரதமர் ஹான் டக் சூ நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்பார். அடுத்த 60 நாள்களுக்குள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்படுவது கட்டாயம்.