தென்கொரிய அதிபர் அதிபர் லீ ஜே மியுங் அடுத்த மாதம் (மார்ச்) 1ஆம் தேதி முதல் 2ஆம் தேதிவரை சிங்கப்பூருக்கு இரண்டு நாள் வருகை தரவிருக்கிறார்.
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தின் அழைப்பை ஏற்று அவர் இங்கு வரவுள்ளார்.
திரு லீ, அதிபர் தர்மனையும் பிரதமர் லாரன்ஸ் வோங்கையும் சந்தித்துப் பேசுவார்.
திரு லீயும் திரு வோங்கும் இரண்டு நாடுகளின் வர்த்தகம், எரிசக்திப் பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம், அறிவுசார் சொத்து நிர்வாகம், சுற்றுச்சூழல், பொதுப் பாதுகாப்பு, தற்காப்பு போன்ற பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதைப் பார்வையிடுவர்.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு சனிக்கிழமை (பிப்ரவரி 28) அந்த விவரங்களை வெளியிட்டது. அதிபர் லீயுடன் அவரது மனைவி திருவாட்டி கிம் ஹியே கியுங்கும் வருவார். அவர்களுடன் தென்கொரிய அமைச்சர்களும் மூத்த அதிகாரிகளும் வரவிருக்கின்றனர்.
பூமலையில் உள்ள ஆர்கிட் மலர்களுக்குத் தென்கொரிய அதிபரின் பெயரிலும் அவர் மனைவியின் பெயரிலும் ‘வாண்டா லீ ஜே மியுங், கிம் ஹியே கியுங்’ என்ற சிறப்புப் பெயர்கள் சூட்டப்படும்.
2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆசிய பசிஃபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) மாநாட்டில் கலந்துகொள்ளத் தென்கொரிய நகரான கியோங்ஜுவுக்குப் பிரதமர் லாரன்ஸ் சென்றிருந்தார். அதற்கு முன்பாக இருநாடுகளுக்கும் இடையே இருந்துவரும் அரசதந்திர உறவின் 50ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அவர் அதிகாரபூர்வமாகத் தென்கொரிய அதிபருடன் தனிப்பட்ட சந்திப்பை நடத்தினார்.
அப்போது சிங்கப்பூர்-தென்கொரிய நாடுகளுக்கு இடையே உத்திபூர்வ பங்காளித்துவ ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தைக் காலத்துக்கேற்ப மறுஆய்வு செய்வதற்குத் தென்கொரிய அதிபர் மேற்கொள்ளும் சிங்கப்பூர் வருகை உதவும் என்று வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் இருநாட்டு ஒத்துழைப்புடன், புதிய துறைகளில் ஆழமான விரிவான உறவுகளை வடிவமைக்க உத்திபூர்வ பங்காளித்துவம் வழிவகை செய்யும்.
அதனுள் அரசியல், தற்காப்பு, பொதுச் சேவை, வர்த்தகம், பொருளியல் ஆகிய ஐந்து அடிப்படைத் துறைகளில் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் அடங்கும். அவற்றோடு பசுமைப் பொருளியல், எரிசக்தி ஆற்றல் பயன்பாடு, மேம்பட்ட தொழில்நுட்ப ஆய்வு, மக்கள் தொடர்பு ஆகிய துறைகளில் உத்திபூர்வ பங்காளித்துவம் கவனம் செலுத்தும்.

