சோல்: ராணுவச் சட்டத்தை அறிவித்ததன் தொடர்பில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலுக்கு எதிராகக் கைதாணை பிறப்பிக்குமாறு அந்நாட்டின் புலன் விசாரணைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இதனை அதிகாரி ஒருவர் திங்கட்கிழமை (டிசம்பர் 30) ஊடகங்களிடம் தெரிவித்தார்.
நடப்பு அதிபருக்கு எதிராகக் கைதாணை கோரப்படுவது தென்கொரிய வரலாற்றில் முதல் சம்பவம் ஆகும்.
டிசம்பர் 3ஆம் தேதி திரு யூன் பிறப்பித்த ராணுவச் சட்ட உத்தரவு அரசாங்கத்துக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் ஒரு செயலா என்பதை உறுதிசெய்ய காவல்துறையும் உயர்மட்ட அதிகாரிகளுக்கான லஞ்ச ஊழல் விசாரணை அலுவலகமும் இணைந்து விசாரணையைத் தொடங்கி உள்ளன.
விசாரணைக்கு வருமாறு திரு யூனை அந்த இரு அமைப்புகளும் பலமுறை அழைப்பாணை அனுப்பியும் அவற்றை அவர் பொருட்படுத்தவில்லை என்று கூறப்பட்டது.
விசாரணையின் ஒரு பகுதியாக அதிபர் அலுவலகத்தைச் சோதனையிட காவல்துறை மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இப்படிப்பட்ட சூழலில், திரு யூனுக்கு எதிராகக் கைதாணை பிறப்பிக்குமாறு அந்த இரண்டின் அதிகாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த வேண்டுகோளை ஏற்று கைதாணை பிறப்பிப்பதா வேண்டாமா என்பது குறித்து தலைநகர் சோலில் உள்ள நீதிமன்றம் முடிவெடுக்கும்.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கத்துக்கு எதிராக வன்முறையைத் தூண்டிய குற்றம் தென்கொரிய அதிபரால் தடுக்க இயலாத குற்றங்களில் ஒன்று. அதுபோன்ற குற்றங்களின் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை விலக்க அந்நாட்டின் அதிபருக்கு அதிகாரம் இல்லை.
இதற்கிடையே, கைதாணை பிறப்பிக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை நியாயமற்றது என்றும் அவ்வாறு கோருவதற்கான அதிகாரம் ஊழல் தடுப்பு அமைப்புக்கு இல்லை என்றும் திரு யூனைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் யூன் காப்கெயுன் தெரிவித்து உள்ளார்.
அவசர ராணுவச் சட்டம் என்பது அதிபரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும் அவர் கூறினார்.
கைதாணை கோரிக்கை தொடர்பான தமது கருத்தை எழுத்துபூர்வமாக அளிக்க சோல் மேற்கு வட்டார நீதிமன்றத்துக்கு திங்கட்கிழமை வந்திருந்த அவர், நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசினார்.

